
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. மே 27ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக இந்த வருடம் முதல் முறையாக அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை அடித்து 118* (61) ரன்கள் குவித்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய மிட்சேல் மார்ஸ் 67(37) ரன்கள் விளாசி அசத்தினார். அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 30 (19), விராட் கோலி 54 (30) ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் லியம் லிவிங்ஸ்டன் 0, ரஜத் படிதார் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து பின்னடைவைக் கொடுத்தனர்.
இருப்பினும் அப்போது மிரட்டலாக விளையாடிய கேப்டன் ஜிதேஷ் சர்மா 85* (33), மயங் அகர்வால் 41* (23) ரன்களை விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 18.4 ஓவரிலேயே 230/4 ரன்களை எடுத்த பெங்களூரு 9வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி குவாலிபயர் 2 போட்டியில் விளையாட தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தற்காலிக கேப்டன் ஜிதேஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் பதற்றமான சூழ்நிலையில் அமைதியாக விளையாடினால் இப்போட்டியை முடிக்கும் திறன் உங்களிடம் இருப்பதாக தம்முடைய குரு தினேஷ் கார்த்திக் சொன்னது வெற்றிக்கு உதவியதாக ஜிதேஷ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நிகழ்காலத்தில் இருப்பதைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். விராட் கோலி அவுட்டான பின் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்வதைப் பற்றி நினைத்தேன்”
“அப்போது என்னிடம் வந்த என்னுடைய குரு, ஆலோசகர், அண்ணா தினேஷ் கார்த்திக் “உங்களிடம் இருக்கும் திறமைக்கு பொறுமையுடன் விளையாடினால் எந்த சூழ்நிலையில் இருந்தும் போட்டியை வெல்ல முடியும்” என்று சொன்னார். ஆர்சிபி போன்ற பெரிய அணியில் நான் அழுத்தத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்கிறேன். விராட் கோலி, புவனேஸ்வர் போன்ற வீரர்களுடன் விளையாடுவது உற்சாகமாக இருக்கிறது”
இதையும் படிங்க: 7க்கு 7 அரிதான சாதனை.. 2010 சேசிங் சாதனையை தகர்த்த ஆர்சிபி.. லக்னோவை வீழ்த்தி குவாலிபயர் 1க்கு தகுதி
“இந்தப் போட்டியில் கிடைத்த வேகத்தை அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்லவிருக்கும் நாங்கள் தற்சமயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கேப்டன்ஷிப் பொறுப்பை எனக்கு கொடுத்த ரஜத் படிதாருக்கு பாராட்டு செல்ல வேண்டும். ஹேசல்வுட் ஃபிட்டாக இருக்கிறார். எங்களுடைய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் வலுவான மேட்ச் வின்னர்கள். அதனால் 3 – 4 விக்கட்டுகளை இழந்தாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.