- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அண்ணன் மாதிரியான விராட் கோலி.. இந்த அட்வைஸை கொடுத்ததே நான் முன்னேற காரணம்.. ஜிதேஷ் பேட்டி

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஜிதேஷ் சர்மா கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்தலாக விளையாடினார். அதனால் 2025 சீசனில் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை ஆர்சிபி அணி தங்களுடைய விக்கெட் கீப்பராக வாங்கியது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜிதேஷ் ஆர்சிபி முதல் முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.

குறிப்பாக 221 ரன்களை 176 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் பஞ்சாப்புக்கு எதிரான இறுதிப்போட்டியில் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அதனாலேயே இந்திய அணிக்காக 2025 ஆசியக் கோப்பையில் விளையாட அவர் தேர்வாகியுள்ளார். அந்தத் தொடரில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அண்ணன் விராட் கோலி:

இந்நிலையில் பலரும் தம்முடைய பலவீனம் அல்லது தடுமாறும் விஷயங்களில் முன்னேறுமாறு அறிவுறுத்தியதாக ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி மட்டுமே தம்முடைய பலத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வித்தியாசமான ஆலோசனை தம்முடைய ஆட்டத்தில் நிறைய முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியதாக தெரிவிக்கும் அவர் விராட் கோலி அண்ணனைப் போன்றவர் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

இது பற்றி ஜிதேஷ் பேசியது பின்வருமாறு. “சீனியர்களுக்கு அதிக மரியாதைக் கொடுக்கும் சிறிய கிராமத்திலிருந்து நான் வந்தேன். நீங்கள் சீனியர்களின் சொந்த வாழ்வில் ஊடுருவக்கூடாது. என்னைப் பொறுத்த வரை விராட் கோலியிடம் பேசுவதே பெரிய விஷயம். விராட் பாய் பெரிய நட்சத்திரம் என்பது எனக்குத் தெரியும். அதனால் அவருடைய சொந்த வாழ்வில் ஊடுருவும் பேச்சுக்களை நான் பேச முயற்சிக்கவில்லை”

- Advertisement -

ஜிதேஷ் நெகிழ்ச்சி:

“அவரிடம் தேவையின்றியும் பேச மாட்டேன். பொதுவாக அவரிடம் நான் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே பேசுவேன். அவருடன் ஒரு இடைவெளியை கடைப்பிடித்து அர்த்தமுள்ள பேச்சுக்களை மட்டுமே பேச விரும்புகிறேன். பொதுவாக அனைவரும் நான் தடுமாறக்கூடிய விஷயங்களைப் பற்றி என்னிடம் சொல்வார்கள். ஆனால் விராட் பாய் என்னுடைய பலத்தில் வேலை செய்தார். அது என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது”

இதையும் படிங்க: யுவி, ராயுடுவை சப்போர்ட் பண்ணதுக்காக.. விராட் கோலியுடன் என் நட்பு உடைஞ்சு போச்சு.. உத்தப்பா வேதனை பேட்டி

“அது எனது ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது. அவர் எனக்குக் கொடுத்த தன்னம்பிக்கையால் களத்தில் 100% பங்களிப்பை கொடுப்பது என்னுடைய கடமை என்று நான் உணர்ந்தேன். விராட் பாய் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். என்னுடைய வாழ்வில் அந்த அண்ணனை நான் தாமதமாக கண்டறிந்துள்ளேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய வழிகாட்டுதல்களை நான் கேள்வி கேட்காமல் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -