இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 175 ரன்களை குவித்தது. அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்காவை சிறப்பாக பந்து வீசிய இந்தியா வெறும் 74 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 57* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். பவுலிங் துறையில் அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக அப்போட்டியில் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டு ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணன் சம்சானுடன் போட்டி:
நீண்ட காலம் மிடில் ஆர்டரில் தடுமாறிய சாம்சன் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்து அசத்தினார். ஆனால் திடீரென சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்த இந்திய அணி ஓப்பனிங் இடத்தையும் கொடுத்துள்ளது. அதனால் மிடில் ஆர்டரில் விளையாடிய சாம்சன் 2025 ஆசியக் கோப்பையில் ஓரளவு நன்றாக விளையாடினார்.
இருப்பினும் அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் அவரை கழற்றி விட்டுள்ள அணி நிர்வாகம் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் 10* (5) ரன்கள் குவித்த ஜிதேஷ் 2026 டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாட தாமும் சாம்சனும் ஆரோக்கியமான முறையில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஆரோக்கியமான போட்டி:
“சாம்சன் இந்திய அணியில் இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வெளிப்படையாக பேச வேண்டுமெனில் அவர் என்னுடைய அண்ணனைப் போன்றவர். ஆரோக்கியமான போட்டி இருக்கும் போது தான் திறமை வெளிப்படும் என்பது அணிக்கும் நல்லது. நம் அணியில் நிறைய திறமை இருக்கிறது என்பதை உங்களால் உணர முடியும். சஞ்சு பாய் சிறந்த வீரர். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவருடன் என்னால் போட்டியிட முடியும்”
இதையும் படிங்க: இதுக்கு உதவிய லைஃப் பார்ட்னருக்கு நன்றி.. இந்திய ரசிகர்களுக்காக 10 நிமிஷம் ராக்ஸ்டாராக இருக்கனும்.. பாண்டியா பேட்டி
“இந்தியாவுக்காக விளையாட முயற்சிக்கும் நாங்கள் சகோதரர்களைப் போன்றவர்கள். நிறைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். அவர் எனக்கு நிறைய உதவுகிறார். அணியில் அழுத்தத்துடன் விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறேன். பொதுவாக கடைசி 5 – 6 ஓவர்களில் விளையாடும் போது களத்தில் காணப்படும் அழுத்தம் மற்றும் உற்சாகத்தை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்” என்று கூறினார்.



