ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் கோலாகலமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி மார்ச் 22ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிய வருகிறது. அதில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பெரும்பாலும் விறுவிறுப்பானப் போட்டிகளைக் கொண்ட ஐபிஎல் தொடரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பது வழக்கம். கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் ஆப் வாயிலாக கண்டு களித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வருடம் ஐபிஎல் தொடரை மொபைலில் ஜியோ சினிமா சேனலில் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளித்து வந்தனர்.
அம்பானியின் ஆப்பு:
இந்நிலையில் வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்கள் தற்போது ஒன்றாக ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய சேனல்கள் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதற்கு புதிதாக ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயிரிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் இங்கு விஷயம் என்னவெனில் இந்த அறிவிப்பால் ஐபிஎல் 2025 தொடரின் போட்டிகளை ரசிகர்களால் இலவசமாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த இணைப்புக்கு பின் 2025 ஐபிஎல் தொடர் “ஜியோஹாட்ஸ்டார்” மொபைல் ஆப் வாயிலாக மட்டுமே நேரலையாக பார்க்க முடியும். அதில் பார்ப்பதற்கு ரசிகர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்துங்கள்:
அதற்கு குறைந்தபட்சமாக 3 மாதம் கட்டணமாக 149 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே ஒரு வருடம் பார்க்க விரும்பினால் 499 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இது மொபைலில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமாகும். இதுவே ஜியோஹாட்ஸ்டார் சேனலை தொலைக்காட்சி, கணினி லேப்டாப் போன்ற பெரிய திரையில் பார்க்க விரும்பினால் 3 மாதத்திற்கு 299, வருடத்திற்கு 899 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யார் கேட்டாலும் பர்மிஷன் கிடையாது.. சீனியர் வீரரின் கோரிக்கையை நிராகரித்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?
அதையே விளம்பரம் இல்லாமல் உயர்தரமாக பார்க்க 499, 1499 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2025 ஐபிஎல் தொடரை மொபைலில் இலவசமாக பார்க்க முடியாத அளவுக்கு ஜியோ நிறுவனத்தின் தலைவர் அம்பானி ரசிகர்களுக்கு மறைமுக ஆப்பு வைத்துள்ளார் என்றே சொல்லலாம். இருப்பினும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை வழக்கம் போல பார்க்கலாம். அதையும் கட்டணம் செலுத்திய பின்பே பார்க்க என்பதை ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.



