ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரையும் இழந்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கும் செல்ல முடியாமல் போனது. இந்திய அணியின் இந்த அடுத்தடுத்த தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தன.
யாருக்கும் ஸ்பெஷல் பர்மிஷன் கிடையாது :
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பு இழந்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரினை குறி வைத்து நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்திருந்தது.
அந்த வகையில் இந்திய அணியின் வீரர்கள் இனி தங்களது குடும்பத்தினரையோ, உறவினர்களையோ வெளிநாட்டு தொடர்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை விதித்திருந்தது. 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மட்டும் தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம் என்றும் அதுவும் இரண்டு வாரங்கள் மட்டும் தான் அவர்களை அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது துவங்கவுள்ள வேளையில் இந்திய அணி துபாயில் தான் அனைத்து போட்டிகளையும் விளையாட உள்ளது. இந்த தொடர் 19 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதால் இந்திய அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது தனது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல ஸ்பெஷல் அனுமதி கேட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் அந்த கோரிக்கையை நிராகரித்த பி.சி.சி.ஐ திட்டவட்டமாக தங்களது விதிமுறையை பின்பற்றுவோம் என்றும் இந்திய அணியில் உள்ள எந்த வீரருக்கும் பாகுபாடு கிடையாது என்றும் யாருக்கும் பர்மிஷன் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜோ ரூட்டை தவிர வேற எந்த இங்கிலாந்து வீரருக்கும் அதை சொல்லும் தகுதி இல்ல – கெவின் பீட்டர்சன் காட்டம்
மேலும் தங்களது நிலைப்பாட்டில் தாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம் என்றும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது எந்த வீரர்களுடனும் அவர்களது குடும்பத்தார் இருக்க மாட்டார்கள் என்றும் பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



