மகளிர் உலககோப்பை 2022 : ஜூலன் கோஸ்வாமி உலகசாதனை – ஆனாலும் பரிதாபமாக தோற்ற இந்தியா

Goswami
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 4ஆம் தேதி அன்று துவங்கிய இந்த உலக கோப்பையில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ICC Women's World Cup 2022

- Advertisement -

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போதைய லீக் சுற்றுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

நியூஸிலாந்துடன் 2வது போட்டி:
இதை அடுத்து இந்த உலகக் கோப்பையில் இந்தியா தனது 2-வது லீக் போட்டியில் பலம் பொருந்திய நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு ஹமில்டன் நகரில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ் 5, ஷோபி டேவின் 35 என பெரிய ரன்களை எடுக்க விடாமல் ஆரம்பத்திலேயே இந்திய வீராங்கனை பூஜா வஸ்திரக்கர் அவுட் செய்தார்.

Women's World Cup 2022 IND vs PAK

ஆனால் அடுத்து வந்த நட்சத்திர வீராங்கனை எமிலியா கெர் 5 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்து 50 ரன்கள் எடுத்தார். அவருடன் சாட்டர்த்வைட் 75 ரன்கள் ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் கேட்டி மார்ட்டின் முக்கியமான 41 ரன்களை எடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 260 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அசத்திய இளம் வீராங்கனை பூஜா வஸ்திரக்கர் 4 விக்கெட்டுகளையும் கைக்வாட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

இந்தியா பரிதாப தோல்வி:
இதை அடுத்து 261 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவருடன் தீப்தி சர்மா 5, யஸ்டிகா பாட்டியா 28 என முக்கிய வீராங்கனைகள் பெரிய ரன்களை அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 31 ரன்களில் நடையை கட்டினார். போதாகுறைக்கு அடுத்து வந்த ரிச்சா கோஸ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானதால் 97/5 என தடுமாறிய இந்தியாவின் தோல்வி உறுதியானது.

Women's World Cup 2022 Harmanpreet Kaur

இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் வெறும் 63 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 71 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக போராடிய போதிலும் மறுபுறம் வந்த இதர வீராங்கனைகள் நியூசிலாந்தின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா வெறும் 198 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

ஜூலன் கோஸ்வாமி உலகசாதனை:
இப்போட்டியில் 9 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அனுபவ இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனை “லின் பியூல்ஸ்டோன்” 20 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை எடுத்து உலகக் கோப்பைகளில் அதிக எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்திருந்தார். தற்போது 30 போட்டிகளில் 39* விக்கெட்டுகளை எடுத்துள்ள இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி அந்த உலக சாதனையை சமன் செய்துள்ளார். மகளிர் உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகள்:
1. லின் பியூல்ஸ்டோன் (ஆஸ்திரேலியா) : 39 விக்கெட்டுகள் (20 போட்டிகள்)
2. ஜூலன் கோஸ்வாமி (இந்தியா) : 39* விக்கெட்டுகள் (30 போட்டிகள்)
3. கரோல் ஆன் ஹோட்ஜ்ஸ் (இங்கிலாந்து) : 37 விக்கெட்டுகள் (24 போட்டிகள்)

goswami

இதை அடுத்து இந்த உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி தனது 3-வது லீக் போட்டியில் வரும் மார்ச் 12ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்தப் போட்டியில் மேலும் ஒருசில விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் உலக கோப்பைகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை ஜூலன் கோஸ்வாமி முழுமையாக தன் வசப்படுத்தி இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement