ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பை செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றது. நேற்று நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 339 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய இந்தியா 48.3 ஓவரில் 341/5 ரன்களை அடித்து ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஃபைனலுக்கு சென்றது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிகஸ் 121*, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89, தீப்தி 24, மந்தனா 24, ரிச்சா கோஸ் 26 ரன்கள் எடுத்தார்கள். அதனால் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து இந்தியா 2 உலக சாதனை படைத்தது.
ஆட்டநாயகி ஜெமிமா:
இந்த வெற்றிக்கு சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார். இத்தொடரில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடாததால் நீக்கப்பட்ட அவர் மீண்டும் பெற்ற வாய்ப்பில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வெற்றியைப் பார்த்து கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் அவர் கொடுத்த பேட்டி பின்வருமாறு.
“இதை என்னால் மட்டும் செய்திருக்க முடியாது என்பதால் கடவுளுக்கு நன்றியை சொல்கிறேன். என்னுடைய பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மாதம் மிகவும் கடினமாக இருந்தது. அது மூழ்காத கனவு போல இருந்தது. களமிறங்குவதற்கு 5 நிமிடங்கள் முன்பாகத் தான் நீங்கள் இப்போட்டியில் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள்”
கண்ணீர் மல்க ஜெமிமா:
“என்னைக் காட்டிலும் இப்போட்டியை இந்தியாவுக்காக வெல்ல விரும்பினோம். இன்று என்னுடைய சதம் அல்லது அரை சதத்தை விட இந்தியாவையும் வெற்றி பெற வைப்பதே முக்கியம். கடந்த வருடம் நல்ல ஃபார்மில் இருந்தும் இந்த உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டேன். நடப்பு தொடரிலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் நீக்கப்பட்டதால் இந்த சுற்றுப்பயணம் முழுவதும் நான் தினமும் அழுதேன்”
“மனதளவில் சிறப்பாக செயல்பட தடுமாறிய நான் மன அழுத்தத்திற்குள் சென்றேன். இருப்பினும் என்னுடைய ஆட்டத்தைக் காண்பித்தால் கடவுள் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வார் என்பது எனக்குத் தெரியும். ஆரம்பத்தில் எனக்கு நானே பேசிக்கொண்டேன். பின்னர் களத்தில் நான் நின்றால் எனக்காக கடவுள் போராடுவார் என்ற பைபிள் வார்த்தைகளை நினைவு கொண்டு விளையாடினேன்”
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: 339 சேசிங்கில் இந்தியா 3 உலக சாதனை.. ஆஸியை நாக் அவுட்டாக்கி ஃபைனலுக்கு தகுதி
“எனக்குள் நிறைய ஓடினாலும் அமைதியாக செயல்பட முயற்சித்தேன். இறுதியில் இந்தியா வென்றதைப் பார்த்து என்னால் அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்தால் வெற்றி பெறலாம் என்று ஹர்மன்ப்ரீத் அக்கா சொன்னார். கடைசி வரை விளையாட முயற்சித்த எனக்கு தீப்தி ஒவ்வொரு பந்திலும் ஊக்கமளித்தார். எதற்கான பாராட்டுகளையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியாவுக்காக கொடுத்த ஒவ்வொருவரின் ஆதரவும் எனக்கு உத்வேகம் கொடுத்தது” என்று கூறினார்.



