ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையில் 2வது அரையிறுதி போட்டி அக்டோபர் 30ம் தேதி நவி மும்பையில் நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த வலுவான நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 4வது இடம் பிடித்த இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீராங்கனை ஃபோப் லீச்பீல்ட் சதத்தை அடித்து 119, ஆஸ்லே கார்ட்னர் 63 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இந்தியா அசத்தல்:
அடுத்ததாக 339 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஷபாலி வர்மா 10 (5) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் நிதானமாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரம் வந்தனா 24 (24) ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
2017 உலகக்கோப்பை செமி ஃபைனலில் 171* ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்த அவர் இப்போட்டியிலும் பொறுப்புடன் விளையாடி அரை சதத்தை அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஹர்மன்ப்ரீத் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 89 (88) ரன்கள் விளாசி அவுட்டானர். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெமிமாவும் அரை சதத்தை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
3 உலக சாதனையுடன் ஃபைனலில் இந்தியா:
எதிர்ப்புறம் வந்த தீப்தி சர்மா 24 (17), ரிச்சா கோஸ் 26 (16) ரன்கள் விளாசிய போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள். ஆனாலும் இந்தப்பக்கம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ஜெமிமா சதத்தை அடித்து 14 பவுண்டரியுடன் 127* (134) ரன்கள் குவித்தார். அவருடன் அமன்ஜோத் கௌர் 15* (8) ரன்கள் அடித்ததால் 48.3 ஓவரில் 341/5 ரன்களை குவித்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதனால் 7 முறை உலகக்கோப்பைகளை வென்று நடப்புச் சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியாவை இத்தொடரிலிருந்து நாக் அவுட் செய்த இந்தியா 2005, 2017க்குப்பின் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அத்துடன் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2015 ஆடவர் உலகக் கோப்பையில் ஆக்லாந்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் நியூசிலாந்து 298 ரன்களை சேசிங் செய்து வென்றதே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: அந்த ஒரு காரணத்தை சொல்லி அரைகுறை ராணாவுக்காக.. அர்ஷ்தீப்பை கழற்றி விடாதீங்க.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
அத்துடன் மகளிர் உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற 2 உலக சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் இதே தொடரில் விசாகப்பட்டினத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 331 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனை. இதைத்தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. அதில் 2011 போல இந்தியா சொந்த மண்ணில் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.



