இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இழந்த இலங்கை அணியானது அதற்கடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தற்போது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோற்க வேண்டிய போட்டியை போராடி சமன் செய்து இலங்கை அணி அசத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவித்தது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் 240 ரன்கள் போதுமானது என்பதை இலங்கை அணி பந்துவீச்சின் மூலம் நிரூபித்துள்ளது. அந்த வகையில் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியை 42.2 ஓவர்களில் 208 ரன்களை மட்டுமே வழங்கியது.
இதன் காரணமாக இலங்கை அணி இந்த போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த போட்டியில் வென்றால் இலங்கை அணி தொடரை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய 34 வயதான ஜெப்ரி வாண்டர்சே என்பவர் 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷிவம் துபே, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் என முக்கிய வீரர்கள் அனைவரையும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க : இன்னைக்கு நாங்க இப்படி தோக்க காரணம் இதுதான்.. இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து – ரோஹித் வருத்தம்
ஹசரங்காவுக்கு காயம் ஏற்பட்டு இந்த தொடரில் இருந்து வெளியேறிய வேளையில் அவருக்கு பதிலாக மாற்றுவீராக வந்த அவர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை முற்றிலுமாக வீழ்த்தி இந்த போட்டியில் அந்த அணிக்கு தனி நபராக வெற்றி பெற்று கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. மேலும் அவரது இந்த அசத்தலான பந்துவீச்சு காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதோடு இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய போது ரோஹித் சர்மாவே அவரது பந்துவீச்சை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



