IND vs WI : கம்பேக்னா இப்டி இருக்கணும் – ராபின் சிங் 27 வருட தனித்துவ சாதனையை தூளாக்கி – புதிய வரலாறு எழுதிய ஜெய்தேவ் உனட்கட்

Jaydev Unadkat
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் இறுதி பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியாவை 2வது போட்டியில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் உலக கோப்பைக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலைமையில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வெடுத்து கொடுத்த வாய்ப்பில் இளம் வீரர்கள் மோசமாக செயல்பட்டு இந்தியாவுக்கு படுதோல்வியை பரிசளித்தனர்.

அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பொறுப்புடன் செயல்பட்ட இந்தியா 351/5 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 77 (64) சுப்மன் கில் 85 (92) சஞ்சு சாம்சன் 51 (41) சூரியகுமார்யாதவ் 35 (30) ஹர்டிக் பாண்டியா 70* (52) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செபாஃர்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

உனட்கட் கம்பேக்:
அதைத் தொடர்ந்து 352 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலிருந்தே திண்டாட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 35.3 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 39* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 2006க்குப்பின் தொடர்ந்து 17 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றிய இந்தியா 13வது தொடரையும் வென்றது.

முன்னதாக இப்போட்டியில் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கொச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த அவர் சுமார் 10 வருடங்கள் கழித்து மனம் தளராமல் போராடி 3539 நாட்கள் கழித்து மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் விளையாடி அதற்கடுத்த போட்டியில் நீண்ட வருடங்கள் கழித்து விளையாடிய இந்திய வீரர் என்ற ராபின் சிங்கின் (2786) நாட்கள் தனித்துவமான சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய வரலாற்றை எழுதியுள்ளார். அந்த விரிவான பட்டியல் இதோ:
1. ஜெய்தேவ் உனட்கட் : 9 வருடங்கள் 252 நாட்கள் (2013 – 2023)*
2. ராபின் சிங் : 7 வருடங்கள் 230 நாட்கள் (1989 – 1996)
3. அமித் மிஸ்ரா : 6 வருடங்கள் 160 நாட்கள் (2003 – 2009)
4. பார்த்திவ் படேல் : 6 வருடங்கள் 13 நாட்கள் (2004 – 2010)
5. ராபின் உத்தப்பா : 5 வருடங்கள் 344 நாட்கள் (2008 – 2014)

அந்த வாய்ப்பில் 5 ஓவரில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்த அவர் கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து விக்கெட்டை எடுத்தார். கடைசியாக கடந்த 2013 ஆகஸ்ட் 3ஆம் தேதி கடைசியாக ஜிம்பாப்வேப்புக்கு எதிராக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை எடுத்திருந்தார். குஜராத்தை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் இளம் வயதிலேயே கடந்த 2010இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 2வது வாய்ப்பு பெறாமலேயே கழட்டி விடப்பட்டார்.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ மண்ணில் உச்சக்கட்டமாக அடித்த இந்தியா – 2005இல் செய்த 18 வருட தனித்துவ சாதனையை உடைத்து அபார சாதனை

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2013இல் அறிமுகமாகி 6 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் கண்டு கொள்ளப்படவில்லை. இருப்பினும் மனம் தளராமல் போராடி சமீப காலங்களில் உள்ளூர் தொடரில் அசத்தலாக செயல்பட்ட அவர் கடந்த 2022 டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 12 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து சாதனை படைத்திருந்தார். அதே போலவே தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் 10 வருடங்கள் கழித்து அவர் கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement