இர்ஃபான் பதான் போல ஹாட்ரிக் உட்பட 12 பந்தில் எதிரணியை ஓடவிட்ட ஜெயதேவ் உனட்கட் – ரஞ்சி கோப்பையில் புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி மற்றும் சௌராஷ்ட்ரா ஆகிய அணிகள் மோதிய லீக் போட்டி ஜனவரி 3ஆம் தேதியன்று துவங்கியது. சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் முதல் ஓவரை வீசிய சௌராஷ்ட்ரா கேப்டன் ஜெயதேவ் உனட்கட் 4வது பந்தில் துருவ் சோரேவை டக் அவுட்டாக்கி 5வது பந்தில் அடுத்து வந்த வைபவ் ராவலை கோல்டன் டக் அவுட்டாக்கி 6வது பந்தில் அடுத்து வந்த கேப்டன் யாஷ் துல்லையும் கோல்டன் டக் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்களை சாய்த்தார். அதனால் 0/3 என ஆரம்பத்திலேயே திண்டாடிய டெல்லிக்கு மற்றொரு தொடக்க வீரர் ஆயுஷ் படோனியும் மற்றொரு பவுலர் ஜானியிடம் அவுட்டாகி சென்றார். அந்த நிலையில் மீண்டும் தன்னுடைய 2வது ஓவரை வீசிய ஜெயதேவ் உனட்கட் 4வது பந்தில் ஜான்டி சித்துவை 4 ரன்களிலும் 6வது பந்தில் லலித் யாதவை டக் அவுட்டாகியும் மிரட்டலை கொடுத்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
மொத்தத்தில் தன்னுடைய 2 ஓவரில் வெறும் 12 பந்துகளில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்து டெல்லியை தெறிக்க விட்ட அவர் தன்னுடைய சௌராஷ்டிரா அணிக்கு கேப்டனாக அற்புதமான தொடக்கம் கொடுத்தார். இதுவரை 6 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவரால் டெல்லி 58/8 என திண்டாடி வருகிறது. அதை விட இப்போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த அவர் ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்த முதல் பவுலர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

கடந்த 1934 முதல் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் வேறு எந்த பவுலரும் இது போல் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்ததில்லை. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முன்னாள் வீரர் இர்பான் பதான் முதல் ஓவேரிலேயே ஹாட்ரிக் எடுத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அவருக்கு அடுத்தபடியாக முதல் தர கிரிக்கெட் மற்றும் ரஞ்சி கோப்பையில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலராக ஜெயதேவ் உனட்கட் சாதித்து காட்டி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

- Advertisement -

முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக 19 வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் முதல் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்காததால் எஞ்சிய தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதன் பின் விதியை போல் மறு வாய்ப்பு பெறாத அவர் 2013 – 2018 வரையிலான காலகட்டங்களில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெற்ற ஓரிரு வாய்ப்புகளிலும் சுமாராகவே செயல்பட்டார். போதாக்குறைக்கு சமீப காலங்களில் ஐபிஎல் தொடர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்.

ஆனால் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வரும் அவர் 2019 ரஞ்சிக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து கேப்டனாக முதல் முறையாக சௌராஷ்டிரா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சரித்திரம் படைத்தார். அத்தோடு நிற்காமல் 2022 விஜய் ஹசாரே கோப்பையையும் வென்று தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய அவரை சமீபத்திய வங்கதேச தொடரில் தேர்வுக்குழு தாமாக மீண்டும் தேர்வு செய்தது.

இதையும் படிங்கமும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேமரூன் க்ரீன் பந்துவீச மாட்டார். கண்டிஷன் போட்ட ஆஸி நிர்வாகம் – ஏன் தெரியுமா?

அதில் 12 வருடங்கள் கழித்து 31 வயது நிறைந்த அனுபவ வீரராக களமிறங்கிய அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்து நம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து கனவை நிஜமாக்கினார். இருப்பினும் முதன்மை பவுலர்கள் காயமடைந்ததால் பெற்ற அந்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மீண்டும் அசத்த வேண்டிய அவர் தற்போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து தேர்வுக்குழுவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதனால் அடுத்து நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் அவர் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

Advertisement