IND vs BAN : விடாமுயற்சி, போராட்டத்தால் 12 வருடம் கழித்து அணிக்குள் கம்பேக் கொடுத்த இந்திய வீரர் – சாத்தியமானது எப்படி

jayadev Unadkat
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் முக்கிய நேரத்தில் சொதப்பி அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் இப்படி கத்துக்குட்டியிடம் அவமான தோல்வியை இந்தியா சந்தித்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இருப்பினும் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் பங்கேற்பது சந்தேகமாக பார்க்கப்படும் நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் வெளியேறியுள்ளார். ஏற்கனவே பும்ரா இல்லாத நிலையில் அவருக்கு பதில் விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதே சமயம் அந்த இடத்தில் ஏதேனும் இளம் வீரர் தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் ஜெயதேவ் உடன்கட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

விடாமுயற்சியின் வெற்றி:
சௌராஷ்ட்ராவை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இருப்பினும் 26 ஓவர்கள் வீசிய அவர் 101 ரன்களை வாரி வழங்கி சுமாராக செயல்பட்ட காரணத்தால் அடுத்த போட்டியில் வாய்ப்பு பெறவில்லை. அதன் பின் விதியைப் போல இந்தியாவுக்காக மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறாத அவர் ஐபிஎல் தொடரில் அவ்வப்போது அசத்தலாக செயல்பட்டதால் 2018 வரை வாய்ப்பு பெற்ற 7 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்டார்.

அதனால் மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவரது கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் இந்தியாவுக்காக எப்படியாவது விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்துப் போராடி வந்த அவர் 2019/20 ரஞ்சி கோப்பையை கேப்டனாக சவுராஷ்டிரா அணிக்கு முதல் முறையாக வென்று கொடுத்து சாதனை படைத்தார். அதை விட அந்தத் தொடரில் இதர வீரர்களை காட்டிலும் அதிகபட்சமாக 67 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த அவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2022 விஜய் ஹசாரே கோப்பையில் 19 விக்கெட்டுகளை எடுத்து கேப்டனாகவும் அற்புதமாக செயல்பட்டு சௌராஷ்ட்ரா அன்னிக்கு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

- Advertisement -

அப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டனாகவும் பவுலராகவும் தொடர்ந்து அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் 12 வருடங்கள் கழித்து இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் தேர்வாகி அபார கம்பேக் கொடுத்துள்ள ஜெயதேவ் உனட்கட் விடாமுயற்சியுடன் போராடினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். 12 வருடங்கள் கழித்து விடாமுயற்சியால் போராடி இந்திய அணிக்குள் வந்துள்ள அவருக்கு நிறைய ரசிகர்களும் நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

முதல் தர கிரிக்கெட்டில் 86 போட்டிகளில் 311 விக்கெட்களை எடுத்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அடுத்ததாக விரைவில் துவங்கும் இந்த வருட ரஞ்சி கோப்பையில் அசாம் அணிக்கு எதிராக விளையாட காத்திருந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சௌராஷ்டிரா அணியிலிருந்து வெளியேறும் அவர் விரைவில் விசா பெற்றுக் கொண்டு வங்கதேசம் பயணித்து இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

இதையும் படிங்க: IND vs BAN : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ

முன்னதாக 19 வயதில் இளம் வீரராக இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 12 வருடங்கள் கழித்து தற்போது 31 வயது நிரம்பிய அனுபவம் வாய்ந்த மூத்த வீரராக மீண்டும் விளையாட உள்ளார். எனவே இந்த வாய்ப்பிலாவது சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து விளையாடும் அளவுக்கு அவர் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement