- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பரிசில் அவங்களுக்கும் பங்கு இருக்கு.. இந்திய அணிக்கு 125 கோடி வழங்குவது ஏன்? ஜெய் ஷா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி கோலாகலமாக நிறைவு பெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அங்கே ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளையும் இந்தியா தோற்கடித்தது.

அதைத் தொடர்ந்து செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அத்துடன் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த அவமானத் தோல்விகளையும் இந்தியா உடைத்துள்ளது.

- Advertisement -

125 கோடி பரிசு:
அதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர். அந்த வகையில் வரலாறு படைத்த இந்திய அணிக்கு 125 கோடி என்ற பிரம்மாண்ட பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். உண்மையில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் 20.58 கோடிகள் மட்டுமே பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமான பரிசுத்தொகையை தங்களுடைய இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கியது.

இந்த அறிவிப்பு உலகின் இதர நாட்டு வாரியங்களை திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் 125 பரிசுத்தொகை இந்திய வீரர்களுக்கு மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்கள், அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினர் ஆகியோருக்கும் பங்கிட்டு வழங்கப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றதாலேயே இவ்வளவு பெரிய தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கடைசியாக 2007இல் வென்ற நாம் தற்போது 17 வருடங்கள் கழித்து வென்றுள்ளோம். எனவே பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரிடமும் விவாதித்த பின்பு பரிசுத்தொகை பற்றிய முடிவை எடுத்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன் நாம் ஐசிசி தரவரிசையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் அணியாக இருந்தோம்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை வென்ற நாளை தனது மார்பில் பச்சை குத்த உள்ள இந்திய வீரர் – என்ன காரணம் தெரியுமா?

“நம்முடைய நாட்டில் நாம் கிரிக்கெட்டை ஒரு மதமாக போற்றுகிறோம். நமது வீரர்கள் 20 அணிகள் விளையாடிய தொடரில் வென்றுள்ளனர். எனவே அவர்களுக்கு ஏதாவது நாம் செய்ய வேண்டியிருந்தது. அதனாலேயே 125 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது. இது வீரர்கள் துணை பயிற்சியாளர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக் குழுவினர் ஆகிய அனைவருக்கும் சேரும்” என்று கூறினார்.

- Advertisement -