
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருப்பினும் அவர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
அந்த சூழ்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக 2006க்குப்பின் அந்நாட்டுக்கு செல்வதையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ள இந்தியா 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தி வைத்துள்ளது. அந்த சூழ்நிலையில் இத்தொடரில் இந்தியா விளையாடுமா என்று சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கோரிக்கை:
மேலும் டாப் அணியான இந்தியா தங்களுடைய போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றியும் கண்டது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வரும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடத்துவதற்கு பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும் அந்தத் தொடர் முழுவதும் கராச்சி, லாகூர், ராவில்பிண்டி ஆகிய நகரங்களில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வடிவத்தை 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் நடைபெற்ற பார்படாஸ் நகரில் ஐசிசி நிர்வாகிகளிடம் பாகிஸ்தான் வாரிய தலைவர் மோசின் நக்வி சமர்ப்பித்துள்ளார்.
அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி லாகூர் நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்துடன் உயர்தர பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கும் லாகூரில் இந்தியா தங்களுடைய அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கு பாகிஸ்தான் ஸ்பெஷல் ஏற்பாட்டையும் செய்துள்ளது. ஒருவேளை இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் நாகூரில் விளையாடிக் கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் வாரியம் கூறுகிறது.
இதையும் படிங்க: ஆஹா யாருமே இப்படி பயிற்சி எடுக்க மாட்டாங்க.. அடுத்த உலகக் கோப்பையை அள்ள பாகிஸ்தான் ஸ்பெஷல் பயிற்சி
இதை ஐசிசி ஏற்றுக்கொண்ட நிலையில் பிசிசிஐ சம்மதம் தெரிவித்தால் அடுத்தக் கட்ட வேலைகளை செய்யலாம் என்று பாகிஸ்தான் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் விளையாடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.