
கடந்த ஜூன் 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலக கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
தோனியின் தலைமையில் 2007-ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய வேளையில் அதற்கு அடுத்து தற்போது 17 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு ஐசிசி தொடர்களை இறுதிவரை நெருங்கி தவறவிட்டு வந்த இந்திய அணி இம்முறை கோப்பையை கைப்பற்றியது வீரர்களுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு இந்த இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விராட் கோலியின் அரைசதம், பாண்டியாவின் இறுதிநேர சூப்பர் ஸ்பெல், பும்ராவின் அசத்தல், சூரியகுமார் யாதவின் அசத்தலான கேட்ச் என கோலாகலமாக டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த இறுதி போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அணி வீரர்களிடம் என்ன கூறினார் என்பது குறித்து சூரியகுமார் யாதவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இறுதிப்போட்டிக்கு முன்னதாக எங்களிடம் பேசிய ரோஹித் சர்மா : “என்னால் இந்த மலையை தனியாக ஏற முடியாது”. நான் உச்சத்தை அடைய வேண்டும் என்றால் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும்.
இதையும் படிங்க : ரிஷப் பண்டை வெளியேற்றி விட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது சிஷ்யனை களமிறக்கவுள்ள கம்பீர்
ஆகையால் உங்கள் கால்கள், மனம் மற்றும் இதயங்களில் எது இருக்கிறதோ அனைத்தையும் விளையாட்டுக்கு கொண்டு வாருங்கள் என ஊக்கப்படுத்தினார். அவரது வார்த்தைகள் எங்களை இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட வைத்தது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.