ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தக்க வைக்கப்படும் வீரர்கள் மற்றும் வாங்கும் வீரர்களின் அடிப்படை விதிமுறைகளில் பிசிசிஐ மாற்றம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு புதிய ஊக்கத் தொகை கொள்கையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதன் படி 2025 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சம் ஊக்கத் தொகையாக வீரர்கள் பெறுவார்கள். அதே போல அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடினால் 1.05 கோடி ரூபாய் எக்ஸ்ட்ரா ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஷா அறிவிப்பு:
இந்த ஊக்கத்தொகை ஏற்கனவே ஒப்பந்தத்தில் வழியாக வழங்கப்படும் சம்பளத் தொகையை தாண்டி எக்ஸ்ட்ராவாக வழங்கப்படும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணி நிர்வாகங்களும் ஒரு சீசனில் 12.60 ரூபாய் தனியாக ஒதுக்கி வீரர்களுக்கு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளது பின்பெறுமாறு.
“இது ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நமது வீரர்கள் வெளிப்படுத்தி வரும் அற்புதமான செயல்பாடுகளைக் கொண்டாடும் தருணம். எங்கள் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் போட்டி கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதே போல ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் வழங்கப்படும்”
போனஸ் அறிவிப்பு:
“இதற்காக ஒவ்வொரு அணியும் சீசனுக்காக 12.60 கோடி ரூபாய்களை ஒதுக்கும். இது ஐபிஎல் தொடருக்கும் நமது வீரர்களுக்கும் ஒரு புதிய சகாப்தம்” என்று கூறியுள்ளார். அதாவது தற்சமயத்தில் விராட் கோலி 12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். எனவே 2025 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க: சோகமாக இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி.. சீக்கிரம் பார்க்க வருவேன்.. கொல்கத்தா ஆலோசகர் ப்ராவோ
அது போக 2025 ஐபிஎல் தொடரின் 16 லீக் போட்டிகளிலும் விளையாடினால் விராட் கோலிக்கு எக்ஸ்ட்ராவாக 1.05 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இது வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களுக்கும் வழங்கப்படும் என்பது உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.



