எங்களில் பாதி கூட இல்ல, மனசுல சூப்பர் ஸ்டார் என்ற நினைப்பா – ஆப்கன் வீரர்களை விளாசும் பாக் ஜாம்பவான்

Asif-ali
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டியில் அனல் பறந்த திரில்லர் தருணங்களும், வீரர்களுக்கிடையே மோதலும், ரசிகர்களிடையே அடிதடியும் கொண்ட மறக்க முடியாத போட்டியாக நடைபெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் அற்புதமாக பந்துவீசி ஆச்சர்யமளித்த ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அழுத்தத்தை கொடுத்து.

Farooqi

- Advertisement -

அதனால் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யார்க்கார் பந்துகளாக வீச முயற்சித்த பரூக்கியின் பந்துகளை அடுத்தடுத்த சிக்சர்களாக பறக்கவிட்ட நசீம் ஷா யாருமே எதிர்பாராத வகையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் ஏற்கனவே இலங்கையிடம் தோற்ற ஆப்கானிஸ்தான் இந்த தோல்வியால் ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியது. அதேபோல் ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் தோற்ற நடப்பு சாம்பியன் இந்தியாவும் ஆப்கானிஸ்தானின் தோல்வியால் வீட்டுக்கு கிளம்பியது.

போர்க்கள காட்சிகள்:
முன்னதாக இப்போட்டியில் 18வது ஓவரை வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் பரீட் அஹமத் பாகிஸ்தானின் ஆசிப் அலியை 16 (8) ரன்களில் அவுட்டாக்கினார். அந்த முக்கியமான விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை ஆசிப் அலியின் அருகில் சென்று ஆக்ரோஷமாக கொண்டாடிய அவர் சில வார்த்தைகளையும் உபயோகித்தார். அதனால் கோபமடைந்த ஆசிப் அலி பேட்டால் அடிக்க முயற்சித்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பெவிலியன் திரும்பினார். அதை பார்த்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இறுதியில் தங்களது அணி தோல்வியடைந்ததாலும் அதற்கு வழக்கம்போல சில பாகிஸ்தான் ரசிகர்கள் வாய் சவடால் விட்ட காரணத்தாலும் பொங்கி எழுந்து மைதானத்தில் இருந்த நாற்காலிகளை பிடுங்கி அவர்களை சரமாரியாக அடித்தனர்.

Afg vs Pak Fans Fight

அத்துடன் மைதானத்துக்கு வெளியையும் கைகலப்பு நிகழ்ந்ததால் நேற்றைய போட்டியின் முடிவில் சார்ஜா மைதானம் போர்க்களமாக காட்சியளித்தது. அப்படி அத்துமீறி நடந்து கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நிறைய பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் ஜாவேத் மியான்தத் ஒரு காலத்தில் கிரிக்கெட் பயிற்சிகளை தங்களது நாட்டு உதவியுடன் தங்களது நாட்டில் கற்றுக்கொண்டு அதில் இன்னும் பாதியளவு கூட தேர்ச்சி பெறாமல் தங்களுடனேயே மோதுவதா என்ற வகையில் ஆப்கானிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் வீரர்களை விட உங்களது மனதில் சூப்பர் ஸ்டார் என்ற நினைப்பா என சாடியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் விளையாடி வென்ற விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எதிரணி மீது மிகவும் ஏமாற்றமடைகிறேன். ஏனெனில் அவர்களது நடத்தை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு காலத்தில் பாகிஸ்தானில் கிரிக்கெட் பயிற்சிகளை எடுத்த அவர்கள் இப்போது இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அவருடைய முகத்தை பாருங்கள், அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை பாருங்கள்”

Javed

“அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது? ஒருவேளை அவர்கள் தங்களைத் தாங்களே பெரியவர்கள் என்று நினைக்கிறார்களா? சொல்லப்போனால் தற்சமயத்தில் இன்னும் அவர்கள் உண்மையான தரமான கிரிக்கெட்டை விளையாடக் கூட துவங்கவில்லை. அவர்கள் புத்தி இழந்து விட்டார்களா? முதலில் கிரிக்கெட் வித்தைகளை அவர்கள் எங்களிடமிருந்து கற்றார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஆரம்ப காலங்களில் நான் அவர்களுக்கு பயிற்சியளித்தேன்”

“ஆனால் நேற்றிரவு அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் திடீரென்று தங்களைத் தாங்களே சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் கிரிக்கெட்டில் நீங்கள் தற்சமயத்தில் எதுவுமே கிடையாது. முதலில் கிரிக்கெட்டை விளையாட கற்றுக்கொள்ளுங்கள். முதலில் மரியாதையுடன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக் கொள்ளுங்கள்” என்று விமர்சித்தார். அதாவது ஆரம்ப காலங்களில் தங்களது நாட்டில் பயிற்சிகளையும் கிரிக்கெட்டையும் கற்றுக்கொண்டு தற்போது தங்களுக்கு எதிராகவே இப்படி ஆப்கானிஸ்தான் நடந்து கொள்வது கோபத்தை ஏற்படுத்துவதாக ஜாவேத் மியான்தத் விமர்சித்துள்ளார்.

Advertisement