ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்தியா இம்முறை ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் அத்தொடரில் சமி விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
ஏனெனில் 2023 உலக கோப்பையில் சந்தித்த காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்னும் குணமடைந்து விளையாடாமல் இருக்கிறார். அது போன்ற சூழ்நிலையில் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு 155கி.மீ வேகத்தில் பந்து வீசும் இளம் வீரர் மயங் யாதவ் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற பேச்சுகள் காணப்படுகின்றன.
ஷமிக்கு பதிலாக:
இந்நிலையில் ஷமி காயத்திலிருந்து குணமடையாவிட்டால் மயங் யாதவுக்கு பதிலாக முகேஷ் குமார், ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர் ஜத்தின் பரஞ்சபி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி ஃபிட்டாக இல்லையெனில் பும்ராவுக்கு அடுத்தபடியாக சிராஜ் விளையாட வேண்டும். 3வது இடம் ஆகாஷ் தீப்புக்கு செல்லும்”
“இந்தத் தொடரில் இந்தியா 5 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்கும் என்று நினைக்கிறேன். அது பும்ரா, ஷமி, சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார். அர்ஷ்தீப் சிங் போன்ற சில பேக்-அப் பவுலர்களையும் அவர்கள் எடுத்துச் செல்லலாம். அவர்களுக்கு 16 வீரர்கள் கொண்ட அணி தேவை. காயங்கள் ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க 6 – 7 வீரர்கள் எக்ஸ்ட்ரா பயணிப்பார்கள்”
இந்தியா வெல்லும்:
“அதே சமயம் ஷமி குணமடைந்து விட்டால் அவர் விளையாடுவார். இல்லையெனில் இப்போதைய ஃபாரம் அடிப்படையில் சிராஜுக்கு மேலே நான் ஆகாஷ் தீப்பை விளையாட வைப்பேன். இம்முறை இந்தியா 3 – 2 அல்லது 4 – 1 என்ற கணக்கில் வெல்லும் என்று நான் கருதுகிறேன். நமது வீரர்கள் காயத்தை சந்திக்கவில்லை எனில் இதுவே முடிவாக இருக்கலாம்”
இதையும் படிங்க: மூன்றாவது டி20 போட்டியிலும் இதுதான் நடக்கும்.. கம்பீர் எடுத்த முடிவால் இளம்வீரர் ஏமாற்றம் – விவரம் இதோ
“இந்தியா கண்டிப்பாக தொடரை வெல்லும். அதே சமயம் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பின்னங்காலை வைக்காது. ரோகித் தலைமையிலான இந்தியாவும் வைக்கப்போவதில்லை. எனவே இது குத்துச்சண்டையை போன்ற சிறந்த தொடராக இருக்கும். இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே அதிரடியாக மோதிக் கொள்வார்கள்” என்று கூறினார்.



