ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி நாடு திரும்பியுள்ளது. அந்தத் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் ஜஸ்ப்ரித் பும்ராவின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் வீணானது. ஏனெனில் முதல் போட்டியிலேயே கேப்டனாக எட்டு விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே வேகத்தில் முழுமூச்சுடன் பந்து வீசிய அவர் 5 போட்டிகளில் மொத்தம் 32 விக்கெட்டுகள் எடுத்தார்.
கமின்ஸை வீழ்த்திய பும்ரா:
அதன் வாயிலாக ஒரு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக பும்ரா சாதனை படைத்தார். அது போக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலராகவும் அவர் சாதனை படைத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை 20க்கும் குறைவான சராசரியில் எடுத்த முதல் பவுலர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் அப்படி அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த சர்வதேச வீரர் என்று ஐசிசி விருதை வென்றுள்ளார். அந்த விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டேன் பட்டர்சன், இந்தியாவின் பும்ரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள். தற்போது அந்த இருவரையும் வீழ்த்தியுள்ள பும்ரா ஐசிசி 2024 டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
ரசிகர்களின் ஆறுதல்:
இது அவர் பெறும் இரண்டாவது ஐசிசி சிறந்த மாதாந்திர வீரர் விருதாகும். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஜஸ்ப்ரித் பும்ரா வெளிப்படுத்திய செயல்பாடுகள் மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
இதையும் படிங்க: என்னங்க பெரிய சிராஜ்.. நானே இதை செய்ஞ்சிருந்தா அவரமாதிரி விக்கெட் எடுத்திருப்பேன் – கலாய்த்த சீக்கா ஸ்ரீகாந்த்
தற்போது இந்த விருது இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா லேசான காயத்தை சந்தித்தார். அதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவர் விலகினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



