அஜாக்கிரதையால் பறிபோன விக்கெட்.. அடுத்த ஓவரிலேயே ஆஃப் ஸ்டம்ப்பை பறக்கவிட்ட பும்ரா.. போராடும் இங்கிலாந்து

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தடுமாற்றமாக விளையாடி 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென்ஸ் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 436 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24, கில் 23, ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் அவுட்டானாலும் யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 80 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய பும்ரா:
அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87, கேஎஸ் பரத் 41, அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்துக்கு 45 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 31 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டுக்கெட் நிதானமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.

அப்போது 17வது ஓவரின் ஒரு பந்தை பிட்ச் செய்த பின் திடீரென இடது கை பக்கம் நகரும் அளவுக்கு பும்ரா அபாரமாக வீசினார். அதை தவறாக கணித்த டுக்கெட் அடிக்க தவறியதால் பந்து அவருடைய காலில் பட்டதை தொடர்ந்து இந்திய அணியினர் அவுட் கேட்டனர். இருப்பினும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து இந்தியா ரிவ்யூ எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்து அதிகமாக லெக் சைட் திசையில் சென்றிருக்கும் என்று கருதி இந்திய அணியினர் ரிவ்யூ எடுக்கவில்லை.

- Advertisement -

அதை ரிப்ளையில் பார்த்த போது லெக் ஸ்டம்ப்பில் அடித்தது நன்றாக தெரிந்ததை பார்த்த பும்ரா விரக்தியான ரியாக்சன் கொடுத்தார். அதனால் கடுப்பான அவர் தன்னுடைய அடுத்த ஓவரிலேயே பென் டுக்கெட்டின் ஆஃப் ஸ்டம்ப் பறக்கும் அளவுக்கு அதிரடியான வேகத்தில் 47 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஓலி போப் நிதானமாக விளையாடி 67* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்தியாவே கொண்டாடும் ஹீரோவாக தனது மகன் இருந்தும்.. பழசை மறக்காத ரிங்கு சிங்கின் தந்தை – ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஆனால் எதிர்ப்புறம் ஜோ ரூட் 2, ஜானி பேர்ஸ்டோ 10, கேப்டன் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் முறையே பும்ரா, ஜடேஜா, அஸ்வின் பந்துகளில் ஆட்டமிழந்தனர். அதனால் மூன்றாவது நாள் தேனீர் இடைவெளியில் 172/5 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து இன்னும் 18 ரன்கள் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு போராடி வருகிறது. ஒருவேளை மேஜிக் போல அடுத்த 18 ரன்களில் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் எடுத்தால் இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement