ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள அப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது. 2021ஆம் ஆண்டு அம்மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வரலாறு படைத்தது. அந்த உத்வேகத்துடன் இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணிக்கு டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
வலையில் விழுந்தாரா ரோஹித்:
குறிப்பாக வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவியது. எனவே அங்கே புதிய பந்தில் ஸ்விங் கிடைக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை திணறடிக்கலாம் என்ற திட்டத்துடன் ரோஹித் அந்த முடிவை எடுத்தார் என்றே சொல்லலாம். ஆனால் அந்த முடிவு இதுவரை இந்தியாவுக்கு பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
ஏனெனில் போட்டி துவங்கிய 13.2 ஓவரில் ஆஸ்திரேலியா 28-0 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே கைவிடப்பட்டது. அந்த 13.2 ஓவரில் இந்தியா எதிர்பார்த்த அளவுக்கு பந்து ஸ்விங் ஆகவில்லை, எக்ஸ்ட்ரா பவுன்ஸும் கிடைக்கவில்லை. அதனாலேயே 13 ஓவரில் சந்தியாவுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
பும்ரா அதிருப்தி:
அதை விட நல்ல ஃபார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 4.1வது பந்தை வீசி விட்டு “பந்து பேட்டின் மேல் பகுதியில் படுகிறது” என்று அருகில் இருந்த சுப்மன் கில்லிடம் கூறினார். அத்துடன் 4.5வது பந்தை வீசி விட்டு “நீங்கள் எங்கே வீசினாலும் இது ஸ்விங் ஆகவில்லை” என்று விரக்தியுடன் கூறியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. இதிலிருந்து மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையில் கூட காபா பிட்ச்சில் ஸ்விங் கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: தெய்வமே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? சாராவின் வருகையால் சுப்மன் கில்லை – கிண்டலடிக்கும் ரசிகர்கள்
அதனால் ரோஹித் மழையை தவறாக கணித்து வலையில் விழுந்து விட்டாரா? என்றும் காபா மைதானத்திலும் நமக்கு ஏமாற்றம் தான் கிடைக்குமோ? என்றும் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் காபா பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று மேத்தியூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.



