ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதை அடுத்து நவம்பர் 6ஆம் தேதி துவங்கிய இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடுகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்யாத இந்தியா தடுமாற்றமாக விளையாடி 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42, சுப்மன் கில் 31, ராகுல் 37 ரன்கள் போராடி எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.
இந்தியா கம்பேக் கொடுக்குமா:
பின்னர் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 86-1 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறது. கவாஜா 13 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் லபுஸ்ஷேன் 20*, மெக்ஸ்வீனி 38* ரன்களுடன் உள்ளார்கள். அந்த வகையில் இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி கொஞ்சம் சுமாராகவே விளையாடியது.
அதனால் இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி மீண்டும் அசத்த வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் எடுத்த கவாஜா விக்கெட்டையும் சேர்த்து இந்த வருடம் ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 50* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா சமன் செய்துள்ளார்.
பும்ரா சாதனை:
இதற்கு முன் 1979, 1983ஆம் ஆண்டுகளில் ஜாம்பவான் கபில் தேவ் 2 முறை 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை முதல் முறையாக படைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு ஜாம்பவான் ஜாகிர் கான் 2002ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர்களுக்கு பின்னர் இப்போது தான் பும்ரா 22 வருடங்கள் கழித்து ஒரே வருடத்தில் 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த வரலாற்றுச் சாதனையை இன்று தம்முடைய 31வது பிறந்தநாளில் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: பெர்த்தில் 31%.. 2வது டெஸ்டில் வெறும் 20.3%.. முக்கிய யுக்தியை கோட்டை விட்ட இந்தியா.. அடிக்கும் ஆஸி
முதல் போட்டியில் கேப்டனாக அபாரமாக பந்து வீசிய அவர் 8 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் பும்ரா முன்னேறியுள்ளார். எனவே இந்தப் போட்டியில் மீண்டும் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப அவர் அடுத்தடுத்த நாட்களில் நன்றாக பந்து வீசுவது அவசியமாகிறது.



