149க்கு ஆல் அவுட்.. சவால் விட்ட வங்கதேசத்தை அரை நாளில் முடித்த இந்தியா.. பும்ரா 400 தொட்டு அபார சாதனை

Bumrah 400
- Advertisement -

சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த ஊரில் சதமடித்து 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்தார்கள்.

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு சாத்மன் இஸ்லாமை 2 ரன்களில் ஆரம்பத்திலேயே ஜஸ்ப்ரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார். அதே போல மற்றொரு துவக்க வீரர் ஜாகிர் ஹசனை 3 ரன்களில் போல்ட்டாக்கிய ஆகாஷ் தீப் அடுத்ததாக வந்த மோனிமுல் ஹைக்கை கோல்டன் டக் அவுட்டாக்கினர்.

- Advertisement -

அரை நாளில் மிரட்டிய இந்தியா:

அதனால் 22-3 என ஆரம்பத்திலேயே திணறிய வங்கதேசம் அணிக்கு நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் நஜ்முல் சாண்டோ 20 ரன்களில் சிராஜ் வேகத்தில் நடையை கட்டினார். அதே போல மிடில் ஆர்டரில் முஸ்பிகர் ரஹீம் 8, ஷாகிப் அல் ஹசன் 32, லிட்டன் தாஸ் 22 ரன்களில் பும்ரா, ஜடேஜா பந்து வீச்சில் அவுட்டாகி வங்கதேசத்திற்கு பின்னடைவை கொடுத்தனர்.

இறுதியில் மெஹதி ஹசன் 27* ரன்கள் எடுத்துப் போராடியும் எதிர்ப்புறம் ஹசன் மஹ்முத் 9, டஸ்கின் அகமது 11, நகித் ராணா 9 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் வங்கதேசத்தை வெறும் 149 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 227 ரன்கள் முன்னிலை பெற்றது. குறிப்பாக 2வது நாள் உணவு இடைவெளிக்கு முன் ஆட்டத்தை துவங்கிய வங்கதேசத்தை மதியம் 3.30 மணிக்குள் அரை நாளில் சுருட்டி இந்தியா தெறிக்க விட்டது.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா 400:

குறிப்பாக பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை அரை நாளில் சுருட்டி வீசிய இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 4, சிராஜ் 2, ஜடேஜா 2, ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த 4 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா 400* விக்கெட்டுகளைக் கடந்தார்.

இதையும் படிங்க: வங்கதேசம் 112/8 திணறல்.. ரோஹித்திடம் மன்னிப்பு கேட்ட பண்ட்.. தவறை சரிசெய்து தெறிக்க விட்ட ஆகாஷ் தீப்

அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்த 6வது இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். முதல் 5 இடங்களில் கபில் தேவ் 687, ஜஹீர் கான் 610, ஜவகள் ஸ்ரீநாத் 551, முகமது ஷமி 448, இஷாந்த் சர்மா 434 விக்கெட்டுகளுடன் உள்ளனர். அந்த வகையில் 2011இல் அறிமுகமான ஷமியை 2016இல் அறிமுகமான பும்ரா இந்த பட்டியலில் துரத்தி நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement