ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு தொடர்நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றினார். அதே போல ஆல் ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஃபைனலில் சூரியகுமாரின் அபார கேட்ச்சால் டேவிட் மில்லரை அவுட்டாக்கி கோப்பையை வெல்ல உதவினார்.
அந்த வெற்றியால் ஹர்திக் பாண்டியா மைதானத்திலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். ஏனெனில் ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் அவருடைய தலைமையிலான மும்பை அணி மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்தது. அதை விட வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது.
பாண்டியாவுக்கு சப்போர்ட்:
அதனால் கொந்தளித்த மும்பை ரசிகர்களே தங்களுடைய கேப்டன் என்று பாராமல் ஒவ்வொரு போட்டியிலும் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கிடையே மும்பை அணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் பாண்டியாவுக்கு பும்ரா, சூரியகுமார் போன்ற வீரர்கள் ஆதரவாக இல்லை என்றும் செய்திகள் வெளியாகின. அத்துடன் 2023 உலகக் கோப்பையில் பாதியிலேயே காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாடினார்.
அதனால் பாண்டியா பணத்துக்காக மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். இந்நிலையில் ஐபிஎல் 2024 மும்பை அணியில் விரிசல் இருந்ததாக செய்திகள் வெளியான போதும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் பாண்டியாவுக்கு தாங்கள் ஆதரவு கொடுத்ததாக ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்றதால் அனைத்து ரசிகர்களும் மாறி தற்போது பாண்டியாவை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் பும்ரா பேசியது பின்வருமாறு. “நீங்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கு தான் உள்வட்டம் வருகிறது. இருப்பினும் நாங்கள் ஒரு அணியாக அதை ஊக்குவிக்கவில்லை. அது நியாயமானது என்று நாங்கள் நினைக்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக நாங்கள் அவரிடம் பேசினோம்”
இதையும் படிங்க: அதையும் பாப்போம்.. இம்முறை இந்திய அணியில் 2 விஷயம் ரெடியா இருக்கு.. பாண்டிங் கருத்துக்கு ஜெய் ஷா பதிலடி
“இது போன்ற விஷயங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று விடும். எனவே அது நடந்தால் நடக்கட்டும். ஆனால் அதே விஷயங்கள் நாங்கள் உலகக் கோப்பை வென்றதும் அப்படியே மாறிவிட்டது. அது எங்களுடைய பயணத்தில் ஒரு அங்கமாக அமைந்தது. இது எங்களுக்கும் உலகத்திற்கும் இடையேயானது. எங்களால் முடிந்தளவுக்கு நாங்கள் பாண்டியாவுக்கு ஆதரவு கொடுக்கவே முயற்சித்தோம்” என்று கூறினார்.



