ஆஸ்திரேலியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வரலாற்றில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. இருப்பினும் அதை விராட் கோலி தலைமையில் மாற்றிய இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
அதே போல 2020/21 சீசனில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் ரகானே தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா களமிறங்குகிறது.
சவாலை சந்திப்போம்:
எனவே இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று இந்தியா புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் இம்முறை கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காகவே ஜஸ்ப்ரித் பும்ரா, ரோஹித், விராட் கோலி ஆகியோருக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். அத்துடன் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து ஃபிட்டாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை ஃபிட்டான அனுபவமிக்க இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஜெய் ஷா பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணி அந்தத் தொடருக்காக நன்றாக தயாராகியுள்ளது. நாங்கள் நீண்ட காலமாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். முகமது ஷமியும் ஃபிட்டாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களும் ஃபிட்டாக உள்ளனர்”
இதையும் படிங்க: இப்போவும் சந்தேகமா இருக்கு.. நாங்க கேட்கல தோனிக்காக பிசிசிஐ கொடுத்தா தான் உண்டு.. காசி விஸ்வநாதன் பேட்டி
“எனவே இது மிகவும் அனுபவமிக்க இந்திய அணி” என்று கூறினார். அவர் கூறுவது போல 2020/21 தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடாத நிலையில் பும்ரா, ஷமி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் காயமடைந்து வெளியேறினர். ஆனால் அதையும் தாண்டி இளம் வீரர்களை வைத்து இந்தியா வெற்றி பெற்றது. எனவே இம்முறை அனைத்து முக்கிய வீரர்களும் ஃபிட்டாக ஓய்வெடுத்து தயாராக இருப்பதால் இந்தியா வெல்லும் என்று நம்பலாம்.



