இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியில் இடம் பிடித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை நடைபெற்ற முடிந்துள்ள 2 லீக் ஆட்டங்களில் 7 ஓவர்களை வீசியுள்ள அவர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓமன் அணிக்கெதிரான போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் :
இந்நிலையில் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் அடுத்ததாக விளையாட இருக்கும் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் தங்களது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஓமன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்த போட்டியில் தான் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுத்து வருகிறார். அதுமட்டும் இன்றி முக்கியமான போட்டிகளில் பும்ராவை பயன்படுத்திவிட்டு தேவையான நேரங்களில் அவருக்கு ஓய்வு வழங்கவும் நிர்வாகமும் திட்டமிட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது லீக் சுற்று போட்டிகளின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் கடைசி போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொள்ளவுள்ளார். அப்படி அவர் ஓய்வெடுக்கும் பட்சத்தில் சூப்பர் போர் சுற்றில் அவர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் களத்திற்கு திரும்ப முடியும்.
இதன் காரணமாக அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் பிளேயிங் லெவனிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு வேறொரு வீரருக்கு வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை இந்திய அணிக்காக 72 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இங்கிலாந்தில் ஹீரோவாக ஜொலித்த இந்தியாவின் சிராஜ்.. ஐசிசி ஸ்பெஷல் விருதை வென்றது பற்றி பேட்டி
இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் 90-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு அடுத்து நான்காவது வீரராக பும்ரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



