ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. இத்தொடர் 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. எனவே நான்காவது போட்டியில் வென்று முன்னிலையை பெறப்போகும் அணி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அப்போட்டியில் மீண்டும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று நம்பலாம். ஏனெனில் 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற சாதனையையும் அவர் சமீபத்தில் படைத்தார்.
மால்கம் மார்சல் போல:
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்ஷல் போல ஜஸ்ப்ரித் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களின் பலம் பலவீனத்தை வைத்து அசத்துவதாக ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். எனவே இந்தப் போட்டியிலும் அவர் நன்றாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பேட்ஸ்மேன் என்று வரும் போது அவர் போட்டியை நன்றாக படிக்கக் கூடியவர். என்னுடைய காலத்தில் மார்க்கம் மார்சல் நான் எதிர்கொண்ட சிறந்த பவுலர் என்று கருதுகிறேன். ஏனெனில் அவர் சூழ்நிலைகளை தாண்டி பேட்ஸ்மேன்களின் பலம் பலவீனங்களை படிப்பார். பும்ராவும் அந்த வகையானவர் என்று நினைக்கிறேன். அவர் வேகமாக எதிரணி வீரர்களின் பலம் பலவீனத்தை அறிந்து கொள்கிறார்”
தரமான பும்ரா:
“கிட்டத்தட்ட 200 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் இந்தியாவில் 100 விக்கெட்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அதை 17 என்ற அற்புதமான சராசரியில் அவர் எடுத்துள்ளார். கடினமான சூழ்நிலைகளில் பந்து திரும்பும் என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே புதிய பந்தில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ஆட்டத்தின் கடைசி பகுதிகளில் பும்ரா மிகவும் ஆபத்தானவராக இருப்பார். மெல்போர்ன் (எம்சிஜி) மைதானத்தில் பந்து வீசுவதை அவர் விரும்புகிறார்”
இதையும் படிங்க: மெல்போர்ன் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? – விவரம் இதோ
“நான் பயிற்சியாளராக இருந்த போது இங்கே அவர் 6 விக்கட்டுகளை (2018இல்) எடுத்து ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்டது நினைவிருக்கிறது. அது அதிரடியானது. தற்போது உச்சத்தில் இருப்பதால் அவர் புதிய பந்தில் எந்த பேட்ஸ்மேனுக்கும் சவாலை கொடுப்பார். பந்தை இருபுறமும் திருப்பும் அவர் தொடர்ச்சியாக அசத்தக்கூடியவர்” என்று கூறினார். முன்னதாக 2018 மெல்போர்ன் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.


