ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர வீரரான விராட் கோலி பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 3 இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 26-ஆம் தேதி பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் நகரில் நடைபெறவிருக்கும் வேளையில் இந்த போட்டியில் மீண்டும் விராட் கோலி பார்முக்கு திரும்புவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதற்காக தற்போது விராட் கோலி தீவிரவலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை ஒன்றிணையும் முறியடிப்பாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த போட்டி நடைபெறும் இந்த மெல்போர்ன் மைதானத்தில் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் உட்பட 316 ரன்களை குவித்து மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை இந்திய அணிக்காக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 449 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரகானே மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 369 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க : 4 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் விராட் கோலி மேலும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ரகானே மற்றும் சச்சின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 169 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



