ஐசிசி 2024 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றினார். அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி பாராட்டியிருந்தார். மேலும் அவர் இந்தியாவுக்காக விளையாட நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விராட் கோலி பேசியிருந்தார்.
அந்த சூழ்நிலையில் சமீபத்தில் இந்தியாவிலேயே ஃபிட்டான கிரிக்கெட்டர் யார் என்று ஜஸ்ப்ரித் பும்ராவிடம் செய்தியாளர் கேட்டார். அதற்கு விராட் கோலியின் பெயரை சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வெப்பமான இந்தியாவில் வெற்றிகரமாக விளையாட நிறைய ஃபிட்னஸ் தேவைப்படுவதால் பும்ரா தன்னையே ஃபிட்டான வீரர் என்று பதிலளித்தார்.
கோஹினூர் வைரம் பும்ரா:
அதனால் கோபமடைந்த விராட் கோலி ரசிகர்கள் 2021 – 22 வரை ஒரு வருடம் காயத்தால் விளையாடாத நீங்கள் எப்படி ஃபிட்டான வீரராக இருக்க முடியும்? என்று ட்விட்டரில் பும்ராவை கடுமையாக விமர்சித்தனர். ஏனெனில் உலக கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாக திகழும் விராட் கோலி இந்திய அணியில் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலையை கேப்டனாக இருந்த போது கொண்டு வந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் விராட் கோலி ரசிகர்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய இந்தி யூடியூப் சேனலில் கொடுத்த மறைமுக பதிலடி பின்வருமாறு. “பும்ரா காயமடைந்ததாக மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் எப்படி அவரால் ஃபிட்டாக இருக்க முடியும்? இங்கே லாரிக்கும் பென்ஸ் காருக்கும் வித்தியாசம் இருக்கிறது. பென்ஸ் கார் உதிரி பாகங்கள் மிகவும் விலைமதிப்பானது. லாரி தெற்கு முதல் வடக்கு வரை நிறைய எடையுடன் செல்லும்”
அஸ்வின் பதிலடி:
“ஒரு வேகப்பந்து வீச்சாளர் லாரியை போன்றவர் என்பதால் அவ்வப்போது உடைவார். 145கி.மீ வேகத்தில் வீசி காயமடைந்த அவருக்கு கொஞ்சம் பாராட்டுகளை கொடுங்கள். வெப்பத்தில் 145கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பும்ரா இந்திய கிரிக்கெட்டின் மணிமகுடம். அவர்கள் கோஹினூர் வைரத்தை எடுத்தனர். ஆனால் பும்ரா தற்போது இந்தியாவின் கோஹினூர் வைரமாக உள்ளார்”
இதையும் படிங்க: எல்லாரும் குறைச்சு மதிப்பிடுறாங்க.. அவர் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்.. அஸ்வின் நம்பிக்கை
“எனவே பும்ரா என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் கபில் தேவுக்கு பின் யாராவது அதே தரத்தில் வந்துள்ளார்களா? பும்ரா மட்டுமே அவரைப் போல வந்து போட்டிகளை வென்று கொடுக்கிறார். அப்படிப்பட்ட பும்ராவிடம் கேள்வியைக் கேட்டு பதிலை பெறும் நீங்கள் அந்த பதில் திருப்தியாக இல்லை என்று சொன்னால் அது நியாயமற்றது” என்று கூறினார்.



