ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டு எழுந்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் நியூஸிலாந்துக்கு எதிராக தோற்றதால் இத்தொடரில் தோல்வியை சந்திப்பீர்கள் என்று கணித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விலகினார். அப்போது துணை கேப்டனாக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா வழி நடத்தினார். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் இதற்கு முன் பெரியளவில் கேப்டன்ஷிப் செய்த அனுபவத்தை கொண்டிருக்கவில்லை.
அசத்திய பும்ரா:
அதனால் நியூசிலாந்துக்கு எதிரான சந்தித்த மோசமான தோல்வியில் இருந்து வரும் இந்திய அணியை அவரால் ஆஸ்திரேலியாவில் வழி நடத்த முடியுமா என்ற கேள்விக் காணப்பட்டது. ஆனால் 150க்கு ஆல் அவுட்டாகி தடுமாறிய இந்திய அணிக்கு அபாரமாக பந்து வீசிய பும்ரா மொத்தம் 8 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினர். மேலும் மற்ற வீரர்களை சிறப்பாக வழி நடத்திய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களால் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட முடியாது என்ற கருத்தை பும்ரா பொய்யாக்கியுள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். மேலும் கபில் தேவ், இம்ரான் கான் போல பும்ரா வருங்காலத்தில் நல்ல கேப்டனாக வருவார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கவாஸ்கர் பாராட்டு:
“30 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் கேப்டன்ஷிப்பை கையாள முடியும் என்பதை தெளிவாக காட்டியுள்ளார். அந்தப் போட்டியில் பவுலிங் மாற்றங்களை நன்றாக செய்த அவர் தன்னுடைய நகர்வுகள் மீது ஏராளமான சிறப்பம்சங்களை போட்டார். அது வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல கேப்டன்கள் கிடையாது என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை பொய்யாக்கியுள்ளது”
இதையும் படிங்க: என் தம்பி மாதிரி நெனச்சேன்.. கடைசில இப்படி நடந்ததில் ரொம்ப கஷ்டமா இருக்கு – டெல்லி அணியின் ஓனர் வருத்தம்
“நம்முடைய இந்திய துணை கண்டத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இம்ரான் கான் அற்புதமான கேப்டன். நம்முடைய நாட்டிலேயே கபில் தேவ் இருக்கிறார். அந்த இருவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர்கள் என்று சொல்வதற்கான 2 சிறந்த எடுத்துக்காட்டு” எனக் கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோஹித் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



