
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. கடத்த ஜூன் மாதம் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது.
இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஃபைனலில் அசத்திய விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஒவ்வொரு போட்டியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக தேவைப்படும் போதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த அவர் இந்தியாவின் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
இப்போதே லெஜெண்ட்:
எடுத்துக்காட்டாக பாகிஸ்தானுக்கு எதிரான வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அதை விட இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது 16, 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
அப்படி 15 விக்கெட்டுகளை 4.17 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்து தொடர்நாயகன் விருதையும் வென்றார். அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலராக திகழ்வதாக வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை பும்ரா இப்போதே ஜாம்பவானாக உருவெடுத்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா பாராட்டியுள்ளார்.
மேலும் 2022இல் காயமடைந்த பும்ரா இம்முறை இந்தியாவுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய புத்தகத்தில் ஜஸ்பிரித் பும்ரா 3 வகையான கிரிக்கெட்டிலும் லெஜெண்ட். இங்கே யாரும் 3 வகையான கிரிக்கெட்டிலும் இப்படி அசத்தலாக விளையாடியதில்லை”
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்ட்ரெஸ்ட் வரனும்ன்னா 2 சிஸ்டம் முறையை கொண்டு வாங்க.. ஐசிசிக்கு சாஸ்திரி ஆலோசனை
“இந்தப் பையன் எங்கிருந்து வந்தார்? தன்னம்பிக்கையில் குறைந்திருந்த அவர் வேடிக்கையான பவுலிங் ஆக்சனை கொண்டிருந்தார். ஆனால் அந்த வித்தியாசமான பவுலிங் ஆக்சனில் தான் அவருடைய தன்னம்பிக்கையும் பலமும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஃபிட்டாக இல்லாத அவர் அங்கிருந்து கம்பேக் கொடுத்து இந்தியாவை உலகக் கோப்பை வெல்ல வைத்துள்ளார்” என்று தனது யூடியூப் பக்கத்தில் கூறினார்.