வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. குறிப்பாக கான்பூரில் 2 நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் 2வது போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அந்த வெற்றிக்கு ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர். பவுலிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 67 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக 5வது நாளில் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசத்திற்கு முஸ்பிகர் ரஹீம் மட்டும் நங்கூரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.
அசத்திய பும்ரா:
அதனால் போட்டி உணவு இடைவெளி தாண்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உணவு இடைவெளிக்கு முந்தைய கடைசிப் பந்தில் அவரை கிளீன் போல்ட்டாக்கிய பும்ரா இந்தியா விரைவாக வெற்றி பெற உதவினர். இந்நிலையில் பிட்ச், கால சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் ஜஸ்ப்ரித் பும்ரா தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
எனவே தம்மைப் பொறுத்த வரை ஜஸ்ப்ரித் பும்ரா 21ஆம் நூற்றாண்டின் சிறந்த பவுலர் என்று பாராட்டும் அவர் இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் பேசியது பின்வருமாறு. “பும்ராவுக்கு தன்னுடைய மதிப்பு தெரியும். போட்டியில் எந்தளவுக்கு நம்மால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது அவருக்குத் தெரியும். அவரைப் போன்ற பவுலர் இல்லாமல் இந்திய சூழ்நிலைகளில் எந்த கேப்டனும் இதுப் போன்ற போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்”
21ஆம் நூற்றாண்டின் சிறந்தவர்:
“ஒருவேளை பும்ரா இல்லாமல் இருந்திருந்தால் அந்தப் போட்டி நீண்ட நேரம் சென்றிருக்கும். அடுத்த 15 – 20 வருடங்கள் கழித்து அவருடைய தாக்கமும் புள்ளிவிபரங்களும் பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பும்ரா இந்த நூற்றாண்டின் சிறந்த மித வேகப்பந்து வீச்சாளர் என்று நான் கருதுகிறேன். எந்த வகையான ஃபார்மெட்டிலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் அவரிடம் பந்தை கொடுங்கள்”
இதையும் படிங்க: விராட் கோலி, ரவி சாஸ்திரி தான் எனக்கு அந்த வாய்ப்பில் 2வது பிறப்பை கொடுத்தாங்க.. ரோஹித் சர்மா
“அவர் கேப்டனுக்கு தேவையான விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார். எனவே அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2024 டி20 உலகக் கோப்பையில் பும்ரா 15 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.