
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா கேப்டனாக ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் ரோகித் தலைமையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது.
அதைத்தொடர்ந்து காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியை மழையின் உதவியுடன் இந்தியா ட்ரா செய்தது. அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 எடுத்த அவர் ஆஸ்திரேலியாவை 89-7 என இந்தியா தெறிக்க விட முக்கிய பங்காற்றினார்.
அந்த வகையில் காபா மைதானத்தில் மொத்தமாக அவர் 9 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த 9 விக்கெட்டுகளையும் சேர்த்து இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 52* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் கபில் தேவ் 11 போட்டிகளில் 51 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அந்தப் பட்டியலில் மற்றொரு ஜாம்பவான் அனில் கும்ப்ளே 3வது இடத்தில் 49 விக்கெட்டுகளுடன் உள்ளார். அது போக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர் என்ற சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா): 52*
2. கபில் தேவ் (இந்தியா): 51
3. சர்பராஸ் நவாஸ் (பாகிஸ்தான்): 50
இது போக 2018 – 19 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பும்ரா 21 விக்கெட்டுகளை எடுத்தார். 2021 – 22 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் எடுத்த அவர் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் 20* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சேனா நாடுகளில் 3 தொடர்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் பும்ரா படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா மிஸ் செய்யும்.. என்னோட சாதனையை அஸ்வின் உடைக்காமயே ரிட்டயரானது ஏமாற்றம்.. கும்ப்ளே வாழ்த்து
அந்த வகையில் இந்தத் தொடரில் இந்திய பவுலிங்கை தனி ஒருவனாக தோளில் சுமக்கும் பும்ரா தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். மேலும் கபில் தேவை முந்தியுள்ள அவர் நவீன இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவும் உருவெடுத்துள்ளார். அவர் இந்தியாவுக்காக விளையாடுவதில் ரசிகர்களும் பெருமையடைகிறார்கள்.