- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்டார்க்கிற்கு பும்ரா – ஆகாஷ் மாஸ் பதிலடி.. ஆஸியின் 23 வருட கனவை உடைத்து.. காபாவில் 33 வருட சாதனை

காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கில், விராட் கோலி, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 3வது நாளின் முடிவில் 51-4 என இந்தியா தடுமாறியது. அப்போது இந்தியாவை விரைவில் சுருட்டி ஃபாலோ ஆன் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் எச்சரித்தார்.

- Advertisement -

சாதனை ஜோடி:

அந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மாவும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் ராகுல் முடிந்தளவுக்கு போராடி 84 ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் அசத்திய ரவீந்திர ஜடேஜா 77 ரன்களில் அவுட்டானார். அப்போது இந்தியாவுக்கு 1 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் ஃபாலோ ஆனை தவிர்க்க 33 ரன்கள் தேவைப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

ஆனால் அப்போது கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜஸ்ப்ரித் பும்ரா – ஆகாஷ் தீப் ஆகியோர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்த அந்த ஜோடி சுமாரான பந்துகளில் அதிரடியாக ரன்களையும் குவித்து 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அதன் காரணமாக 260 ரன்கள் எடுத்து இந்தியா ஃபாலோ ஆனை தவிர்த்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்தும் தப்பித்துள்ளது.

- Advertisement -

ஸ்டார்க்கிற்கு பதிலடி:

அதற்கு பும்ரா 10*, ஆகாஷ் தீப் 31 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினர். இதன் வாயிலாக புகழ்பெற்ற காபா மைதானத்தில் 11வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் (47) அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளார்கள். இதற்கு முன் 1991ஆம் ஆண்டு இங்கே மனோஜ் பிரபாகர் – ஜவஹல் ஸ்ரீநாத் 11வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: 423 ரன்ஸ்.. விடைபெற்ற ஜாம்பவான் சௌதீ.. இங்கிலாந்தை நொறுக்கிய நியூஸிலாந்து மாபெரும் சாதனை வெற்றி

அந்த 33 வருட சாதனையை தற்போது உடைத்துள்ள பும்ரா – ஆகாஷ் தீப் ஜோடி ஃபாலோ ஆன் கொடுப்போம் என்று இந்தியாவை எச்சரித்த மிட்சேல் ஸ்டார்க்கிற்கு பதிலடியும் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் கடைசியாக 2001 கொல்கத்தா போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் கொடுத்திருந்தது. அதன் பின் 23 வருடங்கள் கழித்து இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்கும் கனவையும் அந்த ஜோடி உடைத்துள்ளது.

- Advertisement -