
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் மும்பையில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதிய போட்டி ஜனவரி 23ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை மிகவும் சுமாராக விளையாடி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு 10 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரோஹித் சர்மா 3, ஜெய்ஸ்வால் 4, கேப்டன் ரஹானே 12, ஸ்ரேயாஸ் ஐயர் 11, சிவம் துபே 0 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 47-7 என சரிந்த மும்பைக்கு அதிகபட்சமாக சர்தூல் தாகூர் 51, டானுஷ் கோட்டியான் 26 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.
ஜம்மு காஷ்மீர் அணிக்கு அதிகபட்சமாக உமர் நசீர் மற்றும் யுவ்திர் சிங் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக களம் இறங்கிய ஜம்மு காஷ்மீர் நேர்த்தியாக விளையாடி 206 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக சுபம் கஜூரியா 53, அபித் முஸ்தக் 44 ரன்கள் எடுத்தனர். மும்பைக்கு அதிகபட்சமாக மோகித் அவஸ்தி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக களம் இறங்கிய மும்பைக்கு மீண்டும் ரோகித் சர்மா 28, ஜெய்ஸ்வால் 26, ரகானே 16, ஸ்ரேயாஸ் ஐயர் 17, சிவம் துபே 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 91-6 என தடுமாறிய மும்பைக்கு சர்துள் தாகூர் அபாரமாக விளையாடி சதத்தை விளாசி 119, டானுஷ் கோட்டியான் 62 ரன்கள் எடுத்தனர். ஜம்மு காஷ்மீருக்கு அதிகபட்சமாக ஆக்கியூப் நபி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இறுதியில் 205 ரன்களை துரத்திய ஜம்மு காஷ்மீர் அணிக்கு சுபம் கஜ்ரியா 45, யாவர் ஹசன் 24, விவரன்ட் சர்மா 38, அப்துல் சமத் 24, அபித் முஸ்தாக் 32*, வத்வன் 19* ரன்கள் எடுத்தனர். அதனால் 207-5 ரன்கள் எடுத்த ஜம்மு காஷ்மீர் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக 42 முறை சாம்பியன் மற்றும் நடப்பு சாம்பியனாக இருக்கும் மும்பைக்கு எதிராக வரலாற்றில் 2014க்குப்பின் 2வது முறையாக வெற்றியை பதிவு செய்து ஜம்மு காஷ்மீர் சரித்திரம் படைத்தது.
இதையும் படிங்க: ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடியை விட அர்ஷ்தீப் இப்போ சிறந்த பவுலர்.. காரணம் இது தான்.. ஆகாஷ் சோப்ரா
மறுபுறம் மும்பைக்கு அதிகபட்சமாக சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக ரோகித் சர்மா வந்த நேரம் பார்த்து 11 வருடங்கள் கழித்து கத்துக்குட்டியாக கருதப்படும் ஜம்மு காஷ்மீர் அணியிடம் மும்பை தோல்வியை சந்தித்து பரிதாப சாதனை படைத்துள்ளது. அதனால் நடப்பு சாம்பியனாக இருக்கும் மும்பை அணி இத்தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.