184 ரன்ஸ்.. இந்தியாவை அட்டாக் செய்து கலங்கடித்த ஜேமி ஸ்மித்.. 28 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை

Jamie Smith 184
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு சுருட்டியது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 87/5 என இங்கிலாந்து ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது ஜோடி சேர்ந்த ஹரி ப்ரூக் – ஜேமி ஸ்மித் இந்தியாவை திருப்பி அடித்தார்கள்.

- Advertisement -

அட்டாக் செய்த ஸ்மித்:

குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவுக்கு எதிராக ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்த ஸ்மித் அதிரடியாக பேட்டிங் செய்து 80 பந்துகளில் சதத்தை விளாசி இந்தியாவை அட்டாக் செய்தார். அவருடன் சேர்ந்து 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹரி ப்ரூக் சதத்தை அடித்து 158 ரன்கள் குவித்ததால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர். அப்போது அவரை அவுட்டாக்கிய ஆகாஷ் தீப் அடுத்து வந்த கிறிஸ் ஓக்ஸையும் காலி செய்தார்.

அதைப் பயன்படுத்திய சிராஜ் அடுத்ததாக வந்த கார்ஸ், ஜோஸ் டாங், சோயப் பசீர் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் 180 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியாவுக்கு சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் 21 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்ட ஜேமி ஸ்மித் கடைசி வரை அவுட்டாகாமல் 184* ரன்கள் குவித்து இந்திய அணியை கலங்கடித்தார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

28 வருட சாதனை:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1997 ஆக்லாந்து டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து கீப்பர் அலெக் ஸ்டீவர்ட் 173 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அந்த 28 வருட சாதனையை 24 வயதாகும் ஸ்மித் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக முகமது சிராஜ் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

அடுத்ததாக விளையாடும் இந்தியா 3வது நாள் முடிவில் 64/1 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் அவுட்டானாலும் களத்தில் ராகுல் 28*, கருண் நாயர் 1* ரன்களுடன் உள்ளார்கள். தற்சமயத்தில் 244 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement