வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 10ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாராக விளையாடி 121 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக லூயிஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் கஸ் அட்கின்ஷன் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 371 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, ஜோ ரூட் 68, ஜெமி ஸ்மித் 70 ரன்கள் எடுத்தனர்.
ஆண்டர்சனின் சாதனை:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து 150 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது நாள் முடிவில் 79/6 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. முன்னதாக இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002இல் அறிமுகமாகி தன்னுடைய அனுபவத்தால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற அனைத்து தரமான பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்தார். அத்துடன் 188 போட்டிகளில் 703* விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் தற்போது 41 வயதை கடந்துவிட்ட அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவதாக ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இப்போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் 40001 பந்துகளை வீசியுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 40,000 பந்துகளை வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 40001*
2. ஸ்டுவர்ட் ப்ராட் : 33698
3. கோர்ட்னி வால்ஷ் : 30019
4. கிளன் மெக்ராத் : 29248
இதையும் படிங்க: 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் அந்த இந்திய வீரர்தான் – பிரெட் லீ கருத்து
இது மட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 50000 பந்துகளை வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையும் ஜேம்ஸ் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் 42266 பந்துகளை வீசி இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த வகையில் இந்த 2 சாதனைப் பட்டியலிலும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடுத்தபடியாக உள்ள வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர். எனவே அவருடைய இந்த 2 சாதனைகள் வருங்காலத்தில் உடைக்கப்படுவது மிகவும் கடினம் என்றே சொல்லலாம்.



