
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது அறிமுகமான 2008-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பின்னர் தற்போது வரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்து வருகிறது. பல்வேறு நட்சத்திர வீரர்கள் அந்த அணிக்காக வந்து விளையாடி இருந்தாலும் நிலையான வீரர்கள் இன்றி ராஜஸ்தான் அணி தடுமாறி வருகிறது. கடந்த பல சீசன்களாகவே சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்தார்.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் 2026 ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனை தங்களது அணிக்குள் கொண்டு வர பல்வேறு அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. அதனால் அடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சங்ககாரா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் டிராவிட் கொண்டு வரப்பட்டுள்ள வேளையில் ராகுல் டிராவிட்டின் ஆதரவு யாருக்கு செல்லப்போகிறது? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் கேப்டனாக இருந்த வேளையில் அவர் காயமடைந்த போதெல்லாம் ரியான் பராக் தான் தற்காலிக கேப்டனாக இருந்தார்.
அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் ரியான் பராக் தான் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் பதவிக்கு ரியான் பராக் மீது யாருடைய கவனமும் இல்லை என்றும் அடுத்த ராஜஸ்தான் அணியின் கேப்டனுக்கான போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோரே இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட சங்ககாரா அந்த அணியின் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சங்ககாராவுடன் கடந்த பல ஆண்டுகளாகவே நெருங்கிய பிணைப்பில் இருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது துருவ் ஜுரேல் ஆகிய இருவரில் ஒருவரே கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரியான் பராக் என்னதான் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க : கே.எல் ராகுல் அந்த ஐ.பி.எல் அணிக்கு கேப்டனாக சென்றால் ரொம்ப நல்லா இருக்கும் – முகமது கைப் கருத்து
அதேவேளையில் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வரும் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய இருவரில் ஒருவரை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.