மொஹாலி மைதானத்தை தனது கோட்டையாக்கி கொடி கட்டி பறக்கும் இந்திய வீரர் – விவரம் இதோ

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இப்போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரராக சாதனை படைத்த நட்சத்திரம் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.

Jadeja-1

- Advertisement -

இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

திணறும் இலங்கை:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடி கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்களை குவித்தார். அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 97 ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ரன்களும் எடுத்தனர். இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ்சில் களமிறங்கிய இலங்கை வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் கருணாரத்னே, அஞ்சலோ மேத்தியூஸ் போன்ற முக்கிய வீரர்கள் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழலில் சிக்கினார்கள்.

Ravindra Jadeja

இதனால் முதல் இன்னிங்ஸ்சில் 174 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி பாலோ ஆன் பெற்றது. சரி 2வது இன்னிங்சிலாவது போராடுவார்கள் என எதிர்பார்த்த இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் அந்த அணி வீரர்கள் ஏமாற்றமே அளித்தார்கள். ஏனெனில் முதல் இன்னிங்சை போலவே அடுத்த ஒருசில மணி நேரங்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி மீண்டும் 178 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வி அடைந்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இந்தியா 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா:
இந்த போட்டியில் பேட்டிங்கில் 175* ரன்களை விளாசிய ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை சாய்த்து ஒரு ஆல்-ரவுண்டராக செயல்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார். மேலும் சர்வதேச போட்டிகளில் 5000+ ரன்கள் மற்றும் 400+ விக்கெட்டுகள் எடுத்த 2வது வீரர் என்ற மகத்தான பெருமையை ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் பெற்றுள்ளார். இப்படி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தி வரும் ஜடேஜா இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார்..

ஜடேஜாவின் கோட்டை மொஹாலி:
இது மட்டுமல்லாமல் இந்த போட்டியையும் சேர்த்து மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து அபாரமாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதை வென்று மொகாலி கிரிக்கெட் மைதானத்தின் கில்லியாக மாறியுள்ளார். ஆம் இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் 38 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகள் எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Mohali Stadium

அதன்பின் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. அந்த போட்டியிலும் 90 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். தற்போது நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ள அவர் ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மொத்தமாக இந்த மைதானத்தில் இதுவரை அவர் பங்கேற்ற 4 போட்டிகளில் 327 ரன்களையும் 27 விக்கெட்டுகளையும் எடுத்து 3 ஹாட்ரிக் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதிலிருந்தே மொகாலி கிரிக்கெட் மைதானம் ரவீந்திர ஜடேஜாவின் கோட்டை என அழைப்பதில் எந்த தவறும் இல்லை என கூறலாம்.

Advertisement