ஐ.சி.சி யின் கன்கஷன் விதிமுறையின் மூலமாக ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

Jadeja-3
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவை சிறப்பாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளன. இதில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இரு அணிகளுக்குமே மிகப்பெரிய கௌரவம் என்பதினால் இரு அணிகளும் தொடரை கைப்பற்ற மும்முரம் காட்டும்.

INDvsAUS

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி இம்முறை அதை தக்க வைக்க நினைக்கும். அதேபோன்று கடந்த முறை ஏற்பட்ட தோல்விக்கு பழி வாங்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியை வீழ்த்த முயலும் எனவே ரசிகர்களுக்கு இத்தொடர் நிச்சயம் ஒரு சிறப்பான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஜடேஜா இறுதி நேரத்தில் ரன்களை அதிரடியாக குவித்துக் கொண்டிருந்தார். அப்போது மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் ஹெல்மெட்டில் பலமாக அடி வாங்கிய ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு மூளையில் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு கன்கஷன் விதி முறையின் மூலம் 2வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஜடேஜாவுக்கு பதிலாக விளையாடினார்.

Jadeja

அதன் பின்னர் மீதமிருந்த இரண்டு டி20 போட்டிகளில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடினார். இந்நிலையில் தற்போது ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் ஐசிசி-யின் கன்கஷன் விதிமுறை மூலம் ஒரு சிக்கல் உள்ளது. அது யாதெனில் கன்கஷன் விதிமுறை மூலமாக வெளியேறும் ஒரு வீரர் அடுத்த பத்து நாட்களுக்கு எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது. மேலும் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினால் மட்டுமே மீண்டும் அணியில் இணைய முடியும்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளை தவறவிட்ட ஜடேஜா தற்போது முதல் டெஸ்ட் போட்டியையும் தவற விட வாய்ப்புள்ளது. 10 நாட்களுக்குப் பிறகு பயிற்சி போட்டியில் பங்கேற்காமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது சாத்தியம் கிடையாது. இந்திய அணியும் அதை ஏற்றுக்கொள்ளாது. டெஸ்ட் தொடருக்கு முன்னர் நடைபெறும் பயிற்சி போட்டியில் சிகப்பு நிற பந்தில் விளையாடினால் தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும்.

எனவே முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பங்கேற்பது தற்போது சந்தேகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்யக்கூடிய திறன் படைத்தவர். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் 50 ரன்கள் வரை சேர்க்கும் ஒரு வீரர் என்பதால் இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement