இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டை இழந்து 310 ரன்கள் குவித்திருந்த இந்திய அணியானது இன்று தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.
எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் சாதனை நிகழ்த்திய ஜடேஜா :
தற்போது உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 419 ரன்கள் குவித்துள்ள வேளையில் சுப்மன் கில் 168 றங்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக விளையாடி வந்த :
ரவீந்திர ஜடேஜா 137 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் சதத்தை நெருங்கி சென்ற அவர் அருகில் சென்று சதத்தை கோட்டை விட்டாலும் இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை ஒன்றினை சுப்மன் கில்லுடன் இணைந்து நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு இதே மைதானத்தில் ரிஷப் பண்டுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா 222 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக அமைத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சுப்மன் கில்லுடன் இணைந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டாவது முறையாக இதே மைதானத்தில் 200-க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்து அசத்தியுள்ளார்.
எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு இரண்டு முறை 200+ பார்ட்னர்ஷிப் அமைத்ததில் ஜடேஜா இரண்டிலும் பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டு செஷன் எஞ்சியுள்ள வேளையில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : குல்தீப் யாதவ் விடயத்தில் இந்திய அணி செய்த தவறு.. சுட்டிக்காட்டி விமர்சித்த கங்குலி – விவரம் இதோ
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றிய வேளையில் இந்த போட்டியில் பொறுப்புடன் விளையாடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.



