கோப்பையை ஏலத்தில் வாங்க முடியாது. குஜராத்தை பாராட்டி மும்பையை குத்தி காட்டிய – முன்னாள் வீரர்

Rohit Sharma Hardik Pandya MI vs GT
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பைக்காக 10 அணிகள் விளையாடியதால் முன்பை விட இருமடங்கு போட்டி காணப்பட்ட நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியாவை 15 கோடிக்கு வாங்கி கேப்டனாக நியமித்த அந்த அணி நிர்வாகம் ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரை ஏலத்திற்கு முன்பாக வாங்கியது. மேலும் ஏலத்தின் போது முகமது சமி, லாக்கி பெர்குசன், டேவிட் மில்லர், சஹா போன்ற குறைவான நட்சத்திர வீரர்களையும் அதிகளவு அனுபவமில்லாத வீரர்களையும் வாங்கியது.

- Advertisement -

அப்படி கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பாண்டியா தலைமையில் களமிறங்கிய குஜராத் அதுவும் முதல் சீசனிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளில் ஒன்றாக கூட இருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர். ஆனால் மேற்குறிப்பிட்ட வீரர்களும் ஒருசில இளம் வீரர்களும் தேவையான அளவு அனைத்துப் போட்டிகளிலும் கச்சிதமாக செயல்பட்டதால் முதல் போட்டியிலிருந்தே சொல்லி அடித்த அந்த அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை குவித்து முதலிடம் பிடித்து முதல் அணியாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

குஜராத் சாம்பியன்:
ஏனெனில் அதே தருணத்தில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்த மும்பை, சென்னை தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து லீக் சுற்றைக் கூட தாண்ட முடியாமல் முதல் அணிகளாக வெளியேறின. அந்தளவுக்கு அபாரமாக செயல்பட்ட குஜராத் நாக்-அவுட் சுற்றிலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் குவாலிஃபயர் 1 போட்டியில் வென்று நேரடியாக பைனலுக்கு சென்றது. பின்பு இறுதிப் போட்டியிலும் ராஜஸ்தானை தோற்கடித்து அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் முதல் வருடத்திலேயே கோப்பையை முத்தமிட்டு வரலாறு படைத்தது.

MI-Auction

மொத்தத்தில் இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என்று குறைத்து எடை போட்டவர்களின் வாய் மேல் கை வைக்க வைத்த குஜராத் தனது ஐபிஎல் பயணத்தை அட்டகாசமாக தொடங்கியுள்ளது. பாண்டியா போன்ற 3 வீரர்களை மட்டும் பெரிய தொகையில் வாங்கி விட்டு எஞ்சிய தொகையில் டேவிட் மில்லர் போன்ற நிறைய தரமான வீரர்களை அவர்களுக்குத் தகுதியான விலையை கொடுத்து அந்த அணி நிர்வாகம் வாங்கியதே இப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை, சென்னை போன்ற அணிகள் இஷான் கிசான், தீபக் சஹர் போன்ற வீரர்களுக்காக பிரம்மாண்ட தொகையை செலவழித்த நிலையில் அவர்கள் சுமாராகவும் காயத்தாலும் சிறப்பாக செயல்பட முடியாமல் பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

மும்பையை குத்திகாட்டி:
குறிப்பாக இஷான் கிசான் என்ற ஒருவருக்கு மட்டும் 15.25 கோடிகளை வாரி இறைத்த மும்பை அணி நிர்வாகம் விளையாட மாட்டார் என தெரிந்தும் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு இலவச சம்பளமாக வாங்கியது. அதனால் மேலும் ஒருசில தரமான வீரர்களை அந்த அணியால் வாங்க முடியாமல் போனதே இறுதியில் 8 தொடர் தோல்விகள், புள்ளி பட்டியலில் கடைசியிடம் போன்ற அவமானங்களை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் ஏலத்தில் ஒருசில வீரர்களுக்காக பணத்தை வாரி இறைத்தால் கோப்பையை வெல்ல முடியாது குஜராத் போல தரமான வீரர்களை வாங்கினால் தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்று மும்பையை குத்திக்காட்டி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Sanjay

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அணி வீரர்களை குஜராத் மிகச் சிறப்பாக தேர்வு செய்தார்கள் என்பதை நிறையபேர் அறியவில்லை. அவர்கள் வீரர்களையும் கேப்டன்களையும் சரியாக தேர்வு செய்த பார்முலாவே வெற்றி கொடுத்தது. அது ஐபிஎல் ஏலத்தின் போது கோப்பையை வெல்ல முடியாது என்ற பாடத்தை எடுத்துக்காட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அதுதான் சரியான வழி என்பதை நிரூபித்தது.

- Advertisement -

ஆனால் குஜராத் டைட்டன்ஸ் தங்களது அணி வீரர்கள் மீது மிகப்பெரிய பந்தயத்தை கட்டியதற்கு அவர்கள் மிகப் பெரிய பரிசை திருப்பி கொடுத்துள்ளது சிறப்பான கதையாகும். ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோர் மீது அவர்கள் மிகப்பெரிய பந்தயம் கட்டினார்கள். ஆனால் அவர்கள் அதற்கு திருப்பி பரிசளித்துள்ளார்கள்” என்று பேசினார்.

இதையும் படிங்க : குஜராத் அணி சாம்பியன் ஆனதுக்கு பின்னால் இருந்து இயங்கிய 3 முக்கிய நிர்வாகிகள் – இவங்க இல்லனா கப் இல்ல

அதாவது கடந்த காலங்களில் ஏலத்தின் போது சிறப்பான வீரர்களை நல்ல தொகையில் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இந்த முறை அந்த யுக்தியை கோட்டை விட்டதாக தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதை குஜராத் அணி நிர்வாகம் கச்சிதமாக செய்ததாக பாராட்டினார். மேலும் தங்கள் மீது நம்பிக்கை வைத்த குஜராத் அணி நிர்வாகத்துக்கு ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் போன்றவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கும் அவர் தங்களது வீரர்கள் மீது நம்பி கட்டிய பந்தயத்தில் குஜராத் வென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisement