பழைய ஃபார்மை மீட்டெடுக்க ஆரம்பிச்சுட்டாரு, இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது – விராட் கோலிக்கு முன்னாள் பாக் வீரர் ஆதரவு

VIrat Kohli IND vs HK
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தனது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை குவித்து விமர்சனங்களை தூளாக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நிலவுகிறது. ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தாலும் அதே காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்களின் பட்டியலில் அவர் இப்போதும் ஜொலிக்கிறார்.

Virat Kohli IND vs PAK

- Advertisement -

கடந்த 10 வருடங்களாக உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள அவர் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதனால் இடையிடையே 40, 50, 70 போன்ற ரன்களை அடித்தாலும் அனைவரும் அவரை பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் களமிறங்கிய அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ராகுல் கோல்டன் டக் அவுட்டானதும் ரோகித் சர்மாவுடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நிர்ணயித்த 35 ரன்கள் எடுத்தார்.

பார்முக்கு வந்தாரா:
ஆனால் 0 ரன்களில் இருந்த போது கேட்ச்சிலிருந்து தப்பி அதிர்ஷ்டத்தின் உதவியுடன் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார் என்பதற்காக அவர் மீண்டும் விமர்சனங்களையே சந்தித்தார். அந்த நிலைமையில் ஹாங்காங்க்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் சூர்யகுமார் யாதவுடன் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் 59* (43) ரன்களை 134.09 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து மீண்டும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

குறிப்பாக இந்த இன்னிங்சில் கேட்ச் எதுவும் கொடுக்காமல் தடுமாற்றமில்லாமல் அவர் விளையாடிய விதம் ஓரளவு பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டதாக உணர்த்தியது. ஆனாலும் ஹாங்காங் போன்ற தரமில்லாத பந்து வீச்சுக்கு எதிராக 59 குவித்தாலும் முழுமையான பார்முக்கு திரும்பி விட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது என கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் மீண்டும் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

நிறுத்த முடியாது:
இந்நிலையில் இதுபோன்ற விமர்சனங்களை காதில் வாங்காமல் வழக்கம்போல விளையாடுமாறு விராட் கோலியை கேட்டுக்கொள்ளும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் அவர் பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டதாக தாம் உணர்வதாகவும் நம்புவதாகவும் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மீண்டும் ஒரு முறை பேட்டிங் செய்வதில் சிறப்பாக காட்சியளித்தார். அவர் பந்து வீச்சாளர்கள் தமக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் சிறப்பாக பேட்டிங் செய்தார்”

Danish-Kaneria-and-Kohli

“அதிலும் பழைய பார்மை அவர் மீட்டெடுத்து விட்டதாக தோன்றுவது எதிரணிகளுக்கு ஆபத்தான அறிகுறியாகும். கிட்டதட்ட அந்த மோசமான பிடியிலிருந்து வெளிவந்துள்ள அவரை இனிமேல் தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது என்று நினைக்கிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல அதே ஹாங்காங் பவுலர்களுக்கு எதிராக கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய ரன்களையும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்க தவறிய நிலையில் தடுமாறாமல் 59 ரன்கள் குவித்த விராட் கோலி பழைய பார்முக்கு திரும்ப ஆரம்பித்துள்ளார் என்று தாராளமாக கூறலாம்.

சுமாரான ராகுல்:
அதே போல் கத்துக்குட்டியான ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய ராகுல் பற்றி டேனிஷ் கனேரியா பேசியது பின்வருமாறு. “ஹாங்காங்க்கு எதிராக சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடியிருக்கலாம். ஆனால் அதே பவுலர்களுக்கு எதிராக விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அவரைப்போலவே விளையாட முடியவில்லை. அதிலும் கேஎல் ராகுல் ஹாங்காங் போன்ற அணிக்கு எதிராகவே சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். நிறைய பந்துகளை எதிர்கொண்ட அவர் அதிரடியை தொடங்குவதற்கு கடைசி வரை தடுமாறினார். அவர் இன்னும் தனது பார்மை தேடிக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement