
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த 23 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் கடந்த இங்கிலாந்து தொடரின்போது டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்தினார். அவர் இதுவரை 3 டி20 போட்டிகளில் விளையாடி 80 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் அந்த ஒரு நாள் போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.
இதுவரை 2 ஒருநாள் போட்டியில் விளையாடியவர் 60 ரன்களை குவித்துள்ளார். தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பேட்ஸ்மேனாக மாறிய பின்னர் தற்போது அவருக்கு போட்டி அளிக்கும் விதமாக இஷான் கிஷன் தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். ஒருவேளை பண்ட் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தேர்வு செய்யும் அளவிற்கு தற்போது அவர் முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில விடயங்கள் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எந்த இடத்தில் இறங்கினாலும் அதாவது 3 முதல் 6 வரை எந்த இடத்தில் களம் இறங்கினாலும் இறுதிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்.
எப்போது களம் இறங்கினாலும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக மட்டுமே பாடுபடுவார். அதேபோன்று நான் இந்திய அணிக்கு செயல்பட விரும்புகிறேன். அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் அதுதான். எந்த இடத்தில் இறங்கினாலும் அணியின் வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நினைப்பாக உள்ளது. நான் எப்போதெல்லாம் தோனியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என்னிடம் உள்ள சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்கிறேன்.
அந்த வகையில் தோனி எனக்கு பல முறை அறிவுரை கூறியுள்ளார். அவரிடமிருந்து நான் இன்னும் சில விடயங்களை கற்றுக் கொண்டு இனிவரும் காலத்தில் இந்திய அணிக்காக ஒரு நல்ல வீரராக மாற விரும்புவதாக இஷான் கிஷன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.