இந்திய அணியின் இளம் விக்கெட் தீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கடந்து 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 2644 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக மும்பை அணியில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவர் இந்த 2025-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது பெயர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மெகா ஏலத்திற்கு வந்தது.
இஷான் கிஷனுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு :
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷன் இந்திய அணிக்காக கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 2 டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகள் என மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடி இருக்கிறார்.
ஆனால் தொடர்ச்சியாக தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை புறக்கணித்தார். அந்த நேரத்தில் பிசிசிஐ அவரை உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் அவர் அந்த வேண்டுகோளை நிராகரித்ததால் இந்திய அணியின் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார்.
அதேபோன்று அவர் பெரிதாக நம்பியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை கழட்டி விட்டதால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்நோக்கி தற்போது தீவிரமான வேலைகளில் இறங்கியுள்ளார். அந்த வகையில் இஷான் கிஷன் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டுமெனில் அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. அதாவது நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் சன் ரைசர்ஸ் அணி அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து 11.25 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணியில் ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரேல், ஜிதேஷ் சர்மா என பலர் வரிசை கட்டி நிற்கும் வேளையில் அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டுமெனில் எதிர்வரும் 2025 ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி தொடர்ச்சியாக ரன் குவிக்கும் வீரராக இஷான் கிஷன் தன்னை நிரூபிக்க வேண்டும்.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் ரோஹித்தான் கேப்டன்.. அதிரடியாக முடிவெடுத்த பி.சி.சி.ஐ – என்ன காரணம்?
அப்படி ஐபிஎல் தொடரில் அவர் தனது திறனை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முடியும். இது மட்டுமே அவருக்கு கிடைத்துள்ள ஒரே வழி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



