என்னோட முதல் அரை சதமடிக்க அவோரோட சுயநலமற்ற முடிவு தான் காரணம் – இஷான் கிசான் நெகிழ்ச்சி பேட்டி

Ishan kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் குவித்து தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்த நிலையில் ரோஹித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ஜடேஜா 61, அஸ்வின் 56 என இதர வீரர்களும் முக்கிய ரன்களை எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பாக ஜோமேல் வேரிக்கன், கிமர் ரோச் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு எதிராக சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 255 ரன்கள் ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கிரைக் பிரத்வெய்ட் 75 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 181/2 ரன்கள் எடுத்து தங்களுடைய 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

சுயநலமற்ற செயல்:
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 (43) ஜெய்ஸ்வால் 38 (30 இசான் கிசான் 52* (34) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுத்தனர். இறுதியில் 365 ரன்கள் துரத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் 4வது நாள் முடிவில் 76/2 என தடுமாறி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வாலுடன் அறிமுகமான இசான் கிசான் 19 வரை ரன்கள் எடுக்காமல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் கோபமான ரோகித் சர்மா 20வது பந்தில் சிங்கிள் எடுத்ததும் உடனடியாக டிக்ளேர் செய்தார்.

அந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 25 (37) ரன்கள் எடுத்து சுமாராகவே செயல்பட்டு அவர் விமர்சனத்திற்குள்ளானார். குறிப்பாக ரிசப் பண்ட் போல அதிரடியாக விளையாடுவார் என்று நம்பி அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பில் அவர் சொதப்பியது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் டிக்ளேர் செய்வதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் 4வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52* (34) ரன்கள் குவித்து தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இம்முறை அந்த மகிழ்ச்சியில் அவரை கைதட்டி பாராட்டிய கேப்டன் ரோகித் சர்மாவும் அடுத்த பந்துக்கு முன்பாகவே டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தம்முடைய 4வது இடத்தை தடுமாறும் தாம் சுதந்திரமாக விளையாடுவதற்காக சுயநலமின்றி விராட் கோலி கொடுத்ததே முதல் அரை சதமடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக இஷான் கிசான் போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியான பின்னணியை வெளிப்படுத்தினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த அரை சதம் மிகவும் ஸ்பெஷலானது. இதை தான் அணி நிர்வாகமும் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறது என்பதை நானும் அறிவேன். எனக்காக அனைவரும் ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக விராட் கோலி களத்திற்கு சென்று உன்னுடைய ஆட்டத்தை விளையாடு என்று ஆதரவு கொடுத்தார். இந்த சமயத்தில் நாங்கள் நாளை வெல்வோம் என்று நம்புகிறேன். மேலும் இந்த இடத்தில் நான் விளையாடுவது பற்றி விராட் கோலி தான் முடிவெடுத்து என்னை விளையாடுமாறு அனுப்பி வைத்தார். குறிப்பாக அந்த சமயத்தில் இடது கை பவுலர் பந்து வீசியதால் அணிக்கு சாதகமளிக்கும் முடிவை அவர் எடுத்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : வெளிநாட்டில் ஆகாஷ் – சேவாக்கின் 20 வருட சாதனையை தூளாக்கிய ரோஹித் – ஜெய்ஸ்வால், புதிய வரலாற்று சாதனை

அதாவது தன்னுடைய இந்த 500வது போட்டியில் 2வது இன்னிங்ஸில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்கனவே சதமடித்த தமக்கு பதிலாக இளம் வீரர் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் விராட் கோலி சுயநலமின்றி செயல்பட்டுள்ளார் என்று சொல்லலாம்.

Advertisement