இந்தியக்கு கிரிக்கெட் ஏ அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு ஆஸ்திரேலியா செல்ல தயாராகி வருகிறது. மேலும் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியும் அங்கு பயணிக்க இருக்கிறது.
மீண்டும் பலமாக இந்திய அணிக்கு திரும்புவேன் :
இந்நிலையில் இந்த இந்திய ஏ அணியில் இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா சுற்று பயணத்தின் போது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விலகிய அவர் பிசிசிஐ கேட்டுக் கொண்டும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடதால் அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது மட்டுமின்றி மத்திய ஒப்பந்த ஊதிய பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளூர் தொடர்களில் மீண்டும் ஆடி தனது திறனை நிரூபித்த அவருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்திய ஏ அணியில் எனது பெயரை பார்த்தபோது கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தது. ஏனெனில் இதை எனக்கு இரண்டாவது வாய்ப்பாக பார்க்கிறேன். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி பல வெற்றிகளை பெற வேண்டும் என்பது மட்டுமே எனது கனவு. எனது ஆட்டம் சமீப காலத்தில் சிறப்பாக இல்லை என்பதனால் மீண்டும் பார்முக்கு திரும்ப நினைத்தேன். அந்த வகையில் தற்போது மீண்டும் ரன் எடுக்கும் பசியுடன் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகிறேன்.
இந்திய அணிக்காக இனி நான் கம்பேக் கொடுக்கும் போது எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு வீரரும் வித்தியாசமான குணம் உடையவர்கள். நான் கஷ்டப்படும் போது ஹார்டிக் பாண்டியாவின் உதவி நிறையவே இருந்தது. ஏனெனில் கடினமான சூழ்நிலைகளில் கண்ணீர் விடுவதை விட அதை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று அவர்தான் கற்றுக் கொடுத்தார்.
இதையும் படிங்க : 70 வருசம்.. இந்தியாவை சாய்க்க முடியும்ன்னு உலகிற்கே காமிச்சுருக்கோம்.. இது அந்த வெற்றிக்கு சமம்.. சௌதீ பேட்டி
மிக இளம் வயதிலேயே மும்பை அணிக்காக வாங்கப்பட்ட நான் அவருடன் நெருங்கி பழகி உள்ளேன். ஹார்டிக் பாண்டியாவின் மனநிலையில்தான் நானும் இருக்கிறேன். அவர் பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். அவருக்கு எதிராக ஏகப்பட்ட கிண்டல்கள், விமர்சனம் இருந்தும் அதை தகர்த்து தற்போது புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். அதேபோன்று நானும் அவரது வழியை பின்பற்றுவேன் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.