ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிசான் 2022இல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தவர். அதே போல ஐபிஎல் தொடரிலும் ஓரளவு நன்றாக செயல்பட்ட அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் தொடர்ச்சியாக அசத்தத் தவறிய அவர் கடைசியாக 2023 தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் பணிசுமையால் பாதிக்கப்பட்டதாக பிசிசிஐயிடம் சொன்ன அவர் அத்தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதைத் தொடர்ந்து 2024 மார்ச் மாதம் துவங்கிய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் சுமாராக செயல்பட்டார். எனவே அவருக்கு பதிலாக உங்களை தேர்ந்தெடுக்க ரஞ்சிஜ் கோப்பையில் விளையாடி தயாராக இருக்குமாறு இசான் கிசானிடம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டார்.
கம்பேக் வாய்ப்பு:
ஆனால் அதை செய்யாத இசான் கிசான் ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார். அதனால் கோபமடைந்த பிசிசிஐ 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அவரை அதிரடியாக நீக்கியது. போதாக்குறைக்கு 2024 ஐபிஎல் தொடரிலும் மும்பை அணியில் இசான் கிசான் சுமாராக விளையாடினார். அதனால் சமீபத்திய ஜிம்பாப்வே, இலங்கை தொடர்களில் இசான் கிசான் மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.
அதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் விளையாட வேண்டுமெனில் கண்டிப்பாக இஷான் கிசான் உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் புஜ்ஜி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அதில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக விளையாட இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில வாரியம் அறிவித்துள்ளது.
இது பற்றி ஜார்கண்ட் மாநில வாரிய அதிகாரி பேசியது பின்வருமாறு. “இஷான் கிஷான் திறமையில் சந்தேகமில்லை. அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்பது மட்டுமே தேவைப்பட்டது. நாங்கள் அவரிடம் கேட்காமல் ஆரம்பகட்ட பட்டியலை வெளியிட்டோம். இருப்பினும் தற்போது அவர் மீண்டும் விளையாடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஏமாற்றமா இருக்கு.. நைட் 2 மணிக்கு எழுப்பி சொன்னா கூட நாட்டுக்காக இதை செய்வேன்.. கேசவ் மகாராஜ் பேட்டி
முன்னதாக தோனிக்குப் பின் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து இசான் கிஷான் இந்திய அணிக்காக கொஞ்சம் அதிக போட்டிகளில் விளையாடி ரசிகர்களிடம் புகழ்பெற்றுள்ளார். அதனாலேயே அவரை இத்தொடரில் ஜார்க்கண்ட் வாரியம் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையிலும் இஷான் கிசான் விளையாட உள்ளார். அந்தத் தொடர்களில் அசத்தினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



