ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ளது. அதில் முதலாவதாக சமீபத்திய நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் தொடரில் மழைக்கு மத்தியில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

ஆனால் முதலிரண்டு போட்டிகளில் கடைசி நேரங்களில் சொதப்பி அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து தொடரை இழந்து அவமானத்தை சந்தித்த இந்தியா டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற கடைசி போட்டியில் அதற்கு பதிலடி கொடுத்து பழி தீர்க்கும் வகையில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சட்டகிரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா இசான் கிசான் இரட்டை சதமடித்து 210 (131) ரன்களும் விராட் கோலி சதமடித்து 113 (91) ரன்களும் குவித்ததால் 50 ஓவர்களில் 409/5 ரன்கள் விளாசியது.
அதைத் துரத்திய வங்கதேசம் இம்முறை சுதாரிப்புடன் செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணி கோப்பையை வென்றாலும் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்த இந்தியா இஷான் கிசான் போன்ற தரமான வீரர் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகந்துள்ளது.

சான்ஸ் கிடைச்சுடுமா:
ஏனெனில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனைகளை படைத்த இஷான் கிசான் 40 ஓவருக்குள் அவுட்டாகி 300 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டதாக போட்டியின் முடிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் வங்கதேசத்திற்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய அவரது பேட்டிங் அனைவரையும் கவர்ந்தது. ஏனெனில் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியை சந்திக்கும் இந்தியாவுக்கு அவரைப் போன்ற அதிரடி அணுகுமுறையுடன் விளையாடும் வீரர்கள் தான் தேவைப்படுகிறார்கள்.
அதன் காரணமாக தடவலாக செயல்படும் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு பதிலாக 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் இசான் கிசான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என சில ரசிகர்கள் இப்போதே கூறுவதை பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு போட்டியில் 200 ரன்கள் அடித்து விட்டால் வாய்ப்பு கிடைத்து விடுமா என்று நிதர்சனமாக பேசும் அவர் இதர வீரர்கள் ஏற்கனவே அந்த இடத்திற்கு காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அத்துடன் வாயில் பேசாமல் தொடர்ந்து பேட்டில் இதே போல தமது செயல்பாடுகள் பேசினால் நிச்சயம் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தன்னம்பிக்கையுடன் அவர் பேசியது பின்வருமாறு.

“எனக்கு தெரியாது (2023 உலககோப்பை வாய்ப்பு). அதைப் பற்றி நான் சிந்திப்பதும் கிடையாது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படுவது மட்டுமே என்னுடைய வேலையாகும். அணியில் எனக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பேட் பேச விரும்புகிறேன். இருப்பினும் தற்போது நான் இரட்டை சதமடித்துள்ளதால் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும்”
இதையும் படிங்க: வீடியோ : அம்பயரின் தொப்பையில் பந்தால் அடித்து கிண்டல் செய்த பாபர் அசாம் – பின்னணியை கேட்டு சிரிக்கும் ரசிகர்கள்
“மேலும் நான் விளையாடும் பேட்டிங் இடத்தில் இதர வீரர்களும் வெவ்வேறு இடங்களில் விளையாடிய வீரர்களும் வந்துள்ளார்கள். எனவே ஒரு இளம் வீரராக இருக்கும் நான் குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் விளையாடுவேன் என்று அடம் பிடித்து யாரைப் பற்றியும் குறை சொல்ல முடியாது. அதனால் தற்சமயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவது மட்டுமே என்னுடைய வேலையாகும். அந்த வேலையை சிறப்பாக செய்து தான் பெரிய ஜாம்பவான் வீரர்கள் உருவானார்கள்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.



