WTC ஃபைனலில் கேஎல் ராகுலுக்கு பதிலான மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ – ருதுராஜ் உள்ளிட்ட ஸ்டேண்ட் பை வீரர்கள் இதோ

- Advertisement -

வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இந்தியா முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. குறிப்பாக கடந்த தொடரில் விராட் கோலி தலைமையில் அசத்திய போதிலும் மாபெரும் ஃபைனலில் வழக்கம் போல நியூசிலாந்திடம் சொதப்பி நழுவ விட்ட கோப்பையை இம்முறை எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது.

அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட நட்சத்திர வீரர் அஜிங்க்ய ரகானே சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து 2023 ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணியில் சரவெடியாக விளையாடி வித்தியாசமான ஷாட்களை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார். அதனால் ஏற்கனவே இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட அவர் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

மாற்று வீரர்:
இருப்பினும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா கடந்த ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து 3 முறை குணமடைந்து மீண்டும் காயமடைந்து இந்த ஃபைனலில் இருந்து வெளியேறினார். அதை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியை மிஞ்சி சாதனை படைத்த ரிசப் பண்ட்டும் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் தொடக்க வீரராக சதமடித்த அனுபவம் கொண்ட கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக கோப்பையை வெல்ல சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலேயே விக்கெட் கீப்பிங்கில் சொதப்பி பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்ட கேஎஸ் பரத்துக்கு பதிலாக அவர் விளையாடுவது அவசியம் என்று நிறைய கருத்துக்கள் காணப்பட்டன. ஆனால் துரதிஷ்டவசமாக 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ராகுல் தசை பிடிப்பு காயத்தை சந்தித்ததால் ஃபைனலில் இருந்து வெளியேறியுள்ளார். அது இந்தியாவுக்கு மற்றுமொரு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் காயமடைந்து கேஎல் ராகுலுக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமில்லாத அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்ததை தவிர்த்து 2023 தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு அசத்தவில்லை. குறிப்பாக இந்திய மண்ணிலேயே தடுமாறக்கூடிய அவர் இங்கிலாந்தில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் அசத்துவாரா என்பது சந்தேகமாக இருக்கும் நிலையில் இப்படி நேரடியாக ஃபைனலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் கேஎஸ் பரத் கீப்பராக விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. அது போக கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து முக்கிய வீரர்கள் வெளியேறினால் அதை சமாளிப்பதற்கு ருதுராஜ் கைக்வாட், சூரியகுமார் யாதவ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை ஸ்டேண்ட் பை வீரர்களாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் ரஞ்சி கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் இந்த பட்டியலில் கூட இடம் பிடிக்காதது சில ரசிகர்களை ஏமாற்றமடைய வைக்கிறது.

இதையும் படிங்க:CSK : இவரோட பவுலிங்க்கு எதிரா ஆடுறது ரொம்ப கஷ்டம். இனிமே அவருக்கு எதிரா நான் ஆட விரும்பல – ருதுராஜ் கெய்க்வாட் ஓபன்டாக்

அத்துடன் இதே ஐபிஎல் தொடரில் காயமடைந்த உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் என்சிஏ கண்காணிப்பில் உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. எனவே அவர்கள் குணமடைந்தால் ஃபைனலில் விளையாடுவார்கள் அல்லது அதற்கேற்றார் போல் மாற்று வீரர்கள் அறிவிப்பதை பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Advertisement